Published : 28 Mar 2020 01:52 PM
Last Updated : 28 Mar 2020 01:52 PM
கன்னியாகுமரி மருத்துவமனையில் கரோனா இருக்கும் என சந்தேகத்துடன் கண்காணிப்பில் சிகிச்சையில் இருந்த குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மூவரின் மரணம் தொடர்பான உண்மை என்ன என்று சுகாதாரத்துறைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரி ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு கரோனா உறுதியானால் அவருடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களும், கரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் 3 பேர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
2 வயது ஆண் குழந்தை, 24 வயது இளைஞர், 66 வயது முதியவர் என மூன்று பேரும் கரோனா உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர்களின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
கரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உள்ளிட்ட 3 பேரும் இன்று மரணமடைந்தனர். இதையடுத்து கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
மூன்று பேர் திடீரென உயிரிழந்ததால் கரோனாவால் அவர்கள் உயிரிழந்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மூன்று பேருமே நாள்பட்ட தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அளித்த விளக்கம்:
“இன்று கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள 3 உயிரிழப்புகள் குறித்த விளக்கம் கீழ் வருமாறு:
இறந்தவர்களின் விவரம்:
1. 2 வயது ஆண் குழந்தை பிறவி எலும்பு நோய் ((Osteopetrosis) .
2. 66 வயது ஆண் நெடுநாள் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழப்பு ((Chronic Kidney
Disease/Uremic Encephalopathy/Lymphoma).
3. 24 வயது ஆண் நிமோனியா (Pneumonia) தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுத்தன்மை ((Sepsis)) காரணமாக உயிரிழப்பு.
எனினும் மேற்குறிப்பிட்டுள்ளவர்களின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் SOP- ன்படி கரோனா வைரஸ் தொற்று நோய் (COVID - 19) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT