Last Updated : 28 Mar, 2020 01:50 PM

 

Published : 28 Mar 2020 01:50 PM
Last Updated : 28 Mar 2020 01:50 PM

விருத்தாசலம் அருகே ஊரடங்கில் உணவின்றித் தவிக்கும் மத்தியப் பிரதேச குடும்பங்கள்; உதவும் கிராம மக்கள்

மத்தியப் பிரதேச தொழிலாளர்கள்

கடலூர்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவின்றி மரத்தடியில் தவிக்கும் மத்தியப் பிரதேச குடும்பத்தினர் 25 பேருக்கு அருகே உள்ள கிராம மக்கள் உணவு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 65 நபர்களுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெருவோரங்களில் கத்தி, கோடாரி, கடப்பாரை போன்ற பொருள்களை வார்த்து விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த அவர்கள், விழுப்புரம், பண்ருட்டி, வடலூர், சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறை என சுற்றி தற்போது விருத்தாசலத்தில் குப்பநத்தம் அருகே உள்ள ஐய்யனார் கோயிலில் குடும்பத்தோடு தஞ்சமடைந்த நிலையில் கடந்த 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தங்களது வியபாரத்தைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் தங்கள் குழந்தைகளுடன், ஐய்யனார் கோயில் அருகே உள்ள ஆலமரத்தடியில் தங்கியுள்ளனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், வருமானம் இன்றி பட்டினியில் கிடந்துள்ளனர். இதையறிந்த புதுகூரைப்பேட்டை கிராம மக்கள் சிலர், அவர்களுக்கு கோதுமை மாவு வாங்கித் தந்துள்ளனர். அதைக்கொண்டு அவர்கள் சமைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அவர்களுள் ஒருவரான கம்மர் என்பவரிடம் கேட்டபோது, "4 மாதங்களுக்கு முன் வந்தோம். தற்போது திடீரென ஊரடங்கு அமல்படுத்திவிட்டனர். சாலையோரம் வியாபாரத்தை தொடர முடியாத நிலையில், தற்போது கோயில் அருகில் தஞ்சமடைந்துள்ளோம்.

சொந்த ஊர் செல்வதற்கும் போக்குவரத்து வசதியில்லை. வருமானமும் இல்லை. கிராம மக்கள் சிலர் செய்த உதவியைக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகள், சிறுவர்கள் என 25 பேர் இருக்கின்றனர். நாங்களாவது பசியைத் தாங்கிக்கொள்வோம், குழந்தைகளை நினைக்கும்போது கவலையாக உள்ளது.

அரசு எங்கள் நிலையைக் கருதி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசுவிடம் கேட்டபோது, "அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆட்சியருக்கு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளோம். தங்க வைக்கவும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x