Published : 28 Mar 2020 11:29 AM
Last Updated : 28 Mar 2020 11:29 AM

தனிமைப்படுத்தப்பட்டவர் கமல்? அலுலகத்தில் நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை: மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர் என நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அதிகாரிகள் பின்னர் அகற்றினர். விசாரிக்காமல் ஒட்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில் மக்கள் நீதி மய்யக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கை சம்பந்தமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களைப் பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டும், அவர்கள் வீடுகளில் தங்களை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும், வெளியில் நடமாடினால் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டு வாயிலில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில் அவர் எவ்வளவு காலத்துக்கு தனிமைப்படுத்தப்படுகிறார், பெயர், முகவரி ஆகியவை இருக்கும். இதுபோன்ற ஒரு நோட்டீஸை நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலக வாசலில் சென்னை மாநகராட்சியினர் ஒட்டினர்.

இதுகுறித்த செய்தி வெளியாகி கமலுக்கு கரோனா தொற்று, தனிமைப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சியினர் நோட்டீஸை அகற்றினர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

''நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள். அது வீடு அல்ல அலுவலகம். வெளிநாட்டிலிருந்து வந்ததால் ஒட்டியதாகக் கூறுகிறார்கள். அவர் மார்ச்சிலிருந்து இந்தியாவில் இருக்கிறார். அவர் பிரபலமான மனிதர், அரசியல் கட்சித் தலைவர். அவர் அலுவலகமா, வீடா என்று கூட விசாரிக்காமல் ஒட்டுவதா? அதற்கு முன்னர் அந்த அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கலந்து பேசி இருக்கலாம் அல்லவா? எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் கேட்டபோது அந்த அட்ரஸ் என்ன சரியாகத்தான் ஒட்டியுள்ளோம் என்று டக்கென்று போனை வைத்து விட்டார்கள். ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு இப்போது எடுத்துள்ளார்கள். அது என்ன நடைமுறை?

இப்படித்தான் நடக்கிறார்கள். 'இந்தியன்' படப்பிடிப்பு விபத்து தொடர்பான விசாரணையின்போது இரண்டாவது சம்மனிலும் இப்படித்தான் நடந்துக்கொண்டார்கள்.

பாஸ்போர்ட் முகவரி அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் அடிப்படையில் ஒட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது அது முகவரி தவறியதால் எழுந்த குழப்பம். சிறிய தவறு நிகழ்ந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது என்று தெரிவித்தார்.

கமல் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டாலும் அவர் தற்போது அங்கு வசிப்பதில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் வசிக்கிறார்''.

இவ்வாறு முரளி அப்பாஸ் தெரிவித்தார்.

அரசு அனுமதி அளித்தால் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றி மக்கள் நீதி மய்ய மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளிப்பார்கள் என கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x