Published : 28 Mar 2020 10:09 AM
Last Updated : 28 Mar 2020 10:09 AM
காலையில் கஞ்சி, மதியம் நோய் எதிர்ப்பு கசாயம் மற்றும் உணவு, இரவு டிபன் என்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பணியின்றி, உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களைத் தேடி சுடச்சுட மூன்று வேளையும் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது புதுச்சேரி வள்ளலார் சங்கம்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் பணி செய்து உயிர்வாழும் ஏராளமானோருக்கு பொருள் ஈட்ட வழியில்லை. குறிப்பாக, தெருவோரம் வசிப்பவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என சமூகத்தில் உள்ள பலரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் உணவின்றி அவதியுறுகின்றனர்.
இதனை உணர்ந்து புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கும் அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதனை சங்கம் சார்பில், தினமும் 3 வேளையும் பாதிக்கப்பட்டவர்களை தேடித்தேடிச் சென்று உணவளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி தங்களின் பணி தொடர்பாகக் கூறுகையில், "காலையில் கஞ்சி, நண்பகலில் கஞ்சி மற்றும் நோய் எதிர்ப்பு கசாயம், மதியம் சுடச்சுட சாப்பாடு, இரவு டிபன் அளிக்கப்படுகிறது. இதற்காக, தட்டாஞ்சாவடி சன்மார்க்க மையத்தின் சமையல் கூடத்தில் மூன்று வேளையும் சமையல் வேலை நடக்கிறது.
இச்சேவையை உணர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை இலவசமாக அளிக்கிறார்கள். காய்கறி வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக அளிக்கிறார்கள். மேலும, உணவளிக்கவும் சமையல் வேலை செய்யவும் இளைஞர்கள் வருகின்றனர். இதனால், தினமும் 30 கிலோ அரிசியில் கஞ்சி, 125 கிலோ அரிசியில் சாதம், ஆயிரம் பேர் குடிக்கக் கூடிய வகையில் மோர், 1,000 பேர் குடிக்கக் கூடிய வகையில் வள்ளலார் கூறிய கசாயம் அளிக்கப்படுகிறது.
கசாயத்தில் கரிசலாங்கண்ணி, தூதுவளை, வல்லாரை, மொசுமொசுக்கை இலை, மிளகு, சீரகம், கருப்பட்டி எனக் கலக்கப்படுகிறது. இதனை தினமும் குடித்தால் தேகம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உணவைத் தயாரித்து தேவைப்படுவோரைத் தேடிச் சென்று தருகிறோம். இதனால், பலரின் பசியையும் தணிக்க முடிகிறது. இப்பணியைத் தொடர்ந்து புரிவோம்" என்றார் உறுதியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT