Published : 28 Mar 2020 09:49 AM
Last Updated : 28 Mar 2020 09:49 AM
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்குக்கு நடுவிலும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 30-ல் கூடுகிறது
புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டப்பேரவைக் கூட்டமே தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையிலும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தேவையாக உள்ளது. அடுத்த மாதம் ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் 30-ல் புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களால் புதுச்சேரி சட்டப்பேரவை சிறிது நேரம் மட்டும் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது என்றும் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பெறவும் கூடுதலாக மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானமும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT