Published : 28 Mar 2020 08:31 AM
Last Updated : 28 Mar 2020 08:31 AM

பிரசவ காலத்தை நெருங்கிய கர்ப்பிணிகளை கண்காணித்து உதவிகள் செய்ய ஏற்பாடு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை

தமிழகத்தில் வரும் மாதங்களில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணி களின் விவரங்களை சேகரித்து, கண்காணித்து வருவதாகவும், தேவையான மகப்பேறு உதவி களை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,பொதுமக்களுக்கு அத்தியாவசியசேவைகள், பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் வீட்டின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது அவர்களின் கைகளில் முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபரங்கள் சேகரிப்பு

வரும் மாதங்களில் பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணிகளின் விபரங்களை சேகரித்து, தொடர்ந்துகண்காணிக்கவும், மகப்பேறுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உணவகங்களுக்கு வந்து உணவு வாங்கிச்செல்லும் வகையில், உணவகங்களை திறந்து வைக்க உணவக உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்கள் தடையின்றி இயங்கவும், பொது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாகன அனுமதிச் சீட்டு

அத்தியாவசிய சேவைகளான ஆம்புலன்ஸ் வாகனங்கள், பால்,காய்கறி, குடிநீர் மற்றும் குடிமைப் பொருள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

மார்ச் 16-ம் தேதிக்கு முன் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகபட்சமாக 30 நபர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் நடத்தமுடியும். மார்ச் 16-ம் தேதிக்குப்பின் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு, திருமண மண்டப உரிமையாளர்களிடம் முன்பணம் செலுத்தியிருந்தால் அதை திருப்பியளிக்க மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்த, துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் ‘இன்சிடென்ட் கமாண்டராக’ பணிபுரிய அறிவுரைகள் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுரைப்படி மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிவார்கள்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றுவதுடன், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x