Published : 28 Mar 2020 08:28 AM
Last Updated : 28 Mar 2020 08:28 AM
தனிமைப்படுதல் என்பது கூண்டோ,சிறைவாசமோ அல்ல. அது கொடிய நோயான கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளும் வழிமுறை. எனவே பொதுமக்கள் யாரும் ஊரடங்கு நாட்களில் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழகமற்றும் புதுச்சேரி பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத கொடிய நோயாக கரோனா உருவெடுத்துள்ளது. இதை சாதுர்யமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். மனித குலத்துக்கு எதிரான இந்தப் போரில் முன்னோக்கி செல்ல வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கூறியதைப் போல முழுஉத்வேகத்துடன் போராடி இந்த இக்கட்டான சூழலில் அமைதியையும்,சுகாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, ‘நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் எனக்கேட்டுப்பார்’ எனக் கூறிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
கரோனாவைப் பார்த்து பயப்பட வேண்டும். மனஅமைதியை இழக்க வேண்டாம். மனஇறுக்கமடைய வேண்டாம். தனிமைப்படுதல் என்பது கூண்டோ, சிறைவாசமோ அல்ல. அது கொடிய நோயான கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளும் வழிமுறை. அண்டை வீட்டாருக்கு பாதிப்பு ஏற்பட்டால் நேரத்தை வீணடிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து அருகில் இருப்பவர்களுக்கும் உதவுங்கள்.
சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் சமுதாயத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வீடுகளிலும் ஒருவருக்கொருவர் விலகி இருங்கள். கரோனாவின் தாக்கத்தால் நம் நாட்டிலும் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொறுமையாக அமைதி காத்தால் கரோனா என்ற புயலை எளிதாக சமாளித்து விடலாம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த அளவுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளியுங்கள். அந்த இரக்க குணம் தான் நம்முடைய பலத்தையும் அதிகரிக்கும். கரோனா பாதிப்புஉள்ளானவர்களில் பெரும்பாலா னோர் குணமடைந்துள்ளனர் எனஎடுத்துச்சொல்லுங்கள். பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடித்து அரசு இயந்திரங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலை தடுக்க முடியும்.கூட்டம் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். கரோனாவை எதிர்கொள்ள தேசம் நம்மை அழைத்துள்ளது. அதற்கு நாம் நல்ல பதிலைத் தர வேண்டும். கரோனாவுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் விடியல் நல்விடியலாக அமையும். இதற்காக உறுதியேற்போம். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT