Last Updated : 28 Mar, 2020 07:37 AM

 

Published : 28 Mar 2020 07:37 AM
Last Updated : 28 Mar 2020 07:37 AM

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் மன உளைச்சலைத் தடுப்பதற்காக தொலைபேசி வழி மனநல ஆலோசனை: புதுக்கோட்டையில் முதல் முறையாக தொடக்கம்

புதுக்கோட்டை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைப் போக்குவதற்கு புதுக்கோட்டையில் முழு நேரமும் இயங்கும் தொலைபேசி வழி மனநல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்போர், வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதைப் போக்க புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டம் சார்பில் தொலைபேசி வழி மனநல ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோர் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்றி வீடுகளில் இருப்பதால் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படலாம்.

மேலும், தினமும் இடைவிடாது வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார, ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்டோருக்கும் மன உளைச்சல் ஏற்படலாம்.

இவர்களின் நலன்கருதி, தமிழக அரசின் அனுமதியுடன் புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மார்ச் 26-ம் தேதி முதல் தொலைபேசி வழி மனநல இலவச ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படுவோர், 94860 67686, 94941 21297 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். தேவைக்கேற்ப மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் ஆலோசனை கூறுவார்கள் என்றார்.

மக்கள் வரவேற்பு

மனநல திட்ட அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் கூறியபோது, “கஜா புயலில் சிக்கித் தவித்தோருக்கு இலவச மனநல ஆலோசனை வழங்கியபோது நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, தற்போதும் இத்திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்” என்றார். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x