Published : 27 Mar 2020 06:59 PM
Last Updated : 27 Mar 2020 06:59 PM
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 100 ரூபாயை அனுப்பிய நபருக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றன.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து நிதியளிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதற்கான வங்கிக் கணக்கின் விவரங்களையும் வெளியிட்டது. இதனை வைத்து செந்தில் என்ற இளைஞர், கூகுள் பே மூலமாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் வங்கிக் கணக்கிற்கு 100 ரூபாய் அனுப்பி வைத்தார்.
அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, தமிழக முதல்வர் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சிறு துளியே பெருவெள்ளமாகும்! எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக அக்கணமே தங்களால் முடிந்த உதவியைத் தந்தமைக்கு மிக்க நன்றி! தங்களின் பெருந்தன்மையையும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன்!" என்று செந்திலின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்தப் பதிவுக்கு வரும் பதில்களில் பலரும் அவரைப் பாராட்டி ட்வீட் செய்து வருகிறார்கள்.
சிறுதுளியே பெருவெள்ளமாகும்!
எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக அக்கணமே தங்களால் முடிந்த உதவியை தந்தமைக்கு மிக்கநன்றி!
தங்களின் பெருந்தன்மையையும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணத்தையும் மனதார பாராட்டுகிறேன்! https://t.co/Bh78MyG2KN— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT