Published : 27 Mar 2020 02:39 PM
Last Updated : 27 Mar 2020 02:39 PM

ஒட்டன்சத்திரம் காய்கறிகள் வெளி மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல அனுமதி மறுப்பு: அதிகாரிகள் கூறியும் மார்க்கெட்டை திறக்க யோசிக்கும் நிர்வாகிகள்

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டை பிரித்து செயல்படுத்த அதிகாரிகள் கூறியும், வெளிமாநில, வெளி மாவட்டங்களுக்கு காய்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்படுவதால் மார்க்கெட்டை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறிமார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் கேரள மாநிலத்திற்கு 60 சதவீதமும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு 40 சதவீதமும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மார்ச் 24 ம் தேதியில் இருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டுவரவில்லை. இதையடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு காய்கறிகளை அனுப்புவது தடைபட்டது. மேலும் காய்கறிகளை பறிக்கமுடியாமல் செடியிலேயே விவசாயிகள் விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காய்கறிகள் அதிகமாக உற்பத்தி இருந்தபோதும் மார்க்கெட் இல்லாததால் அதை முறையாக வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காய்கறிமார்க்கெட் சங்க நிர்வாகிகளுடன் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல், ஒட்டன்சத்திரம் காந்திகாய்கறி மார்க்கெட் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ஒரே இடத்தில் செயல்படாமல் நான்கு இடங்களில் பிரித்து கூட்டம் அதிகம் கூடாதவகையில் நடத்த மார்க்கெட் சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதற்கு மார்க்கெட் நிர்வாகிகள், ஒட்டன்சத்திரம் காய்கறிமார்க்கெட் ஒரு மொத்த மார்க்கெட், இங்கு விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளில் 60 சதவீதம் கேரள மாநிலத்திற்கு செல்கிறது. 40 சதவீதம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்கிறது. காய்கறிகளை கொண்டுவரச்சொன்னால் விவசாயிகள் அதிகளவில் கொண்டுவந்துவிடுவர். டன் கணக்கில் காய்கறிகளை வாங்கிவைத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்குள் மட்டும் விற்பனை செய்வது என்பது சாத்தியமில்லை. இதனால் வெளி மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டுசெல்ல அனுமதித்தால் மட்டுமே மார்க்கெட்டை திறந்துசெயல்படுத்த முடியும்,

என மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காய்கறிகள் மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க மார்க்கெட்டை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க மார்க்கெட் சங்க நிர்வாகிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x