Published : 27 Mar 2020 02:36 PM
Last Updated : 27 Mar 2020 02:36 PM

வெளிமாநிலங்களில் பட்டினி கிடக்கும் தமிழக லாரி ஓட்டுநர்கள்; அரசுக்கு வைகோ கோரிக்கை

வைகோ: கோப்புப்படம்

சென்னை

வெளிமாநிலங்களில் தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு தேவையானவற்றைச் செய்து கொடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 27) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா என்றாலே நடுநடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்துவிட்டார்கள்.

அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்துவிட்டார்கள்,

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

தமிழ்நாட்டை விட்டு 20 நாட்களுக்கு முன்பு வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

ஒரு லாரி ஓட்டுநர், ஹைதராபாத்தில் இருந்து கதறுவதைக் காணொலியில் கண்டேன். 'சாப்பாடு இல்லாமல் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம். எங்களை அடிக்கிறார்கள். எங்களுக்கு நாதியே இல்லையா?' என்று கேட்கிறார்கள்.

வெளி மாநிலங்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்கள் உட்பட்டோரைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவும் தமிழ்நாடு முதல்வர் ஏற்பாட்டின் பேரில், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x