Published : 27 Mar 2020 01:38 PM
Last Updated : 27 Mar 2020 01:38 PM
பொதுமக்களிடம் வன்முறையைப் பிரயோகிக்காமல் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் என, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து அவசியக் காரணங்கள் இன்றி சாலையில் சுற்றும் நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து வருகின்றனர். கோவை சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் பொதுமக்களைத் தாக்கியதாகப் புகார்கள் எழுந்தன.
கண்காணிப்புப் பணி குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் மாநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
போலீஸார் அடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆய்வின்போது கமிஷனர் சுமித் சரண் போலீஸாருக்கு நேரடியாக சில அறிவுரைகள் கூறியுள்ளார்.
அதில், "சாலைகளில் வரும் வாகன ஓட்டுநர்கள், மக்களிடம் முதலில் எதற்காக வருகின்றனர் என விசாரியுங்கள். அப்படி விசாரிக்காமல் மக்களை அடித்து விரட்டாதீர்கள். கரோனா வைரஸ் குறித்தும், ஊரடங்கு குறித்தும் மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு செய்யுங்கள்.
பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வந்தால் போதும். அதுவும் முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும் என சொல்லுங்கள். தடியை வைத்து மக்களை அடிக்காதீர்கள். தரையில் அடித்து வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்துங்கள்.
மக்களிடம் வன்முறையைப் பிரயோகிக்காமல் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்" எனக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மாநகர போலீஸாருக்கு, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT