Published : 27 Mar 2020 12:06 PM
Last Updated : 27 Mar 2020 12:06 PM
முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார். தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த அவர் 144 தடை உத்தரவை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொதுமக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்படி ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசின் அத்தனை துறைகளும் தீவிரமாக களத்தில் உள்ளன. 144 தடை உத்தரவு அமல்படுத்துவதில் கடும் கவனம் செலுத்தப்படுகிறது. மீறும் பொதுமக்கள் மீது 2000 வழக்குகளுக்கு மேல் போடப்பட்டுள்ளன.1000 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
188-வதுபிரிவு, 269, 270-வது பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றிக் கிடைக்கவும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், 144 தடை உத்தரவைக் கடைப்பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
''பிரதமர் நரேந்திர மோடி இன்று (27.3.2020) காலை 10 மணியளவில் தமிழக முதல்வரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகள் குறித்தும், இது தொடர்பாக பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார்.
அதற்கு முதல்வர், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், பிரதமர் மக்கள் நலன் கருதி, 144 தடை உத்தரவினை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
முதல்வர் மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்”.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT