Last Updated : 27 Mar, 2020 11:49 AM

 

Published : 27 Mar 2020 11:49 AM
Last Updated : 27 Mar 2020 11:49 AM

கடன் வசூலை நிறுத்தி வைக்க உத்தரவு: கிராமப்புற பெண்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்பு

சிறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை வழங்கியுள்ள கடன் தொகையை மறு அறிவிப்பு வரும் வரை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கிராமப்புறப் பெண்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள பெண்களில் பெரும்பாலோனோர் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சிறு வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை கடன்களை வழங்கியுள்ளன. பல குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கடன்களைப் பெற்றுள்ளனர். அதற்கான தவணைத் தொகையை வாராவாரம் வெவ்வேறு கிழமைகளில் கட்டி வருகின்றனர்.

அவசரத் தேவைகளுக்காக வாங்கிய இக்கடன்களுக்கான தவணைத் தொகையை கட்டுவதற்குள் அவர்கள் படாதபாடு படுகிறார்கள். திங்கட்கிழமை ஒரு நிறுவனம், புதன்கிழமை ஒரு நிறுவனம், சனிக்கிழமை ஒரு நிறுவனம் என்று வாரந்தோறும் உழைத்துக் கிடைக்கும் பணத்தையெல்லாம் தவணையாகவே கட்டிவிட்டு வெறும் கையோடு தவிக்கிறார்கள்.

வாரம் முழுவதும் வேலைக்குப் போனால்தான் கடனைக் கட்ட முடியும் என்ற நிலையில் தற்போது ஊரடங்கு நிலவுவதால் வருமானமின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்நிலையிலும் சில நிறுவனங்கள் கிராமங்களில் புகுந்து கடனை வசூலிக்க முயன்றன. இதனால் பல ஊர்களில் பெண்கள் தவணை கட்ட முடியாமல் அவமானத்திற்கு உள்ளானார்கள். அக்கடன்களைத் தள்ளி வைக்கவேண்டும் என்று பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி கடன் தந்துள்ள நிறுவனங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடனை வசூலிக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார். இதனால் கிராமப்புற பெண்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x