

தொழில் நிறுவன முதலாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப கணிசமான தொகையை அரசிடம் கொடுத்து உதவிட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 27) வெளியிட்ட அறிக்கையில், "உலகையே கரோனா வைரஸ் தொற்று பாதிக்கின்றது என்பதால் இந்தியாவையும் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்ற ஒவ்வொருவரும் உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.
அதாவது, மத்திய, மாநில அரசுகள் மட்டும் கரோனா தடுப்புக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கைகள் எடுப்பது போதாது. காரணம், கரோனாவால் நாடே அச்சத்தில் மூழ்கி, தொழில்கள் முடங்கி, வருமானம் ஈட்ட முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
இச்சூழலில், பொருளாதாரம் இல்லாமல் அடிப்படைத் தேவையான உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்ற மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு பொருளாதார உதவி செய்ய முன்வர வேண்டும்.
இப்போதைக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள கட்டாயம் என்னவென்றால் இந்தியாவை கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மிக முக்கியமாக மக்களின் உணவுக்கும், அவசர அவசியத் தேவைக்கும் உதவி செய்தவர்களையும், உதவி செய்துகொண்டிருப்பவர்களையும், உதவி செய்ய இருப்பவர்களையும் தமாகா சார்பில் மனதார பாராட்டுகிறேன்.
மேலும், இந்திய மக்களை கரோனா பாதிப்பிலிருந்து மீட்பதற்காக தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமல்ல உதவக்கூடிய நிலையில் உள்ள ஒவ்வொருவரும் இயன்ற அளவு உதவிட வேண்டும்.
குறிப்பாக, தொழில் நிறுவன முதலாளிகள் தங்களின் நிறுவனம் மூலம் கிடைக்கும் லாபத்தில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கணிசமான தொகையை அரசிடம் கொடுத்து உதவிடலாம்.
மத்திய நிதி அமைச்சர் கரோனாவால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ. 1.7 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார பேக்கேஜ் தொடர்பாகவும் அரிசி, கோதுமை, பருப்பு இலவசமாக வழங்குவது சம்பந்தமாகவும் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதால் அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தமாகா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் கரோனா என்ற கொடிய நோயின் பரவலைத் தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதையும் பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, உணர்ந்து உதவிகரமாகச் செயல்பட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.