Published : 27 Mar 2020 09:40 AM
Last Updated : 27 Mar 2020 09:40 AM
கரோனா அச்சுறுத்தலால் வரவேற்பு, ஏராளமானோருக்கு அழைப்பு, பிரம்மாண்டம் என்ற முறையில் இருந்து மாறி திருமணங்கள் எளிமைக்கு மாறி வருகின்றன.
கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு திருமணங்கள் நடத்த மிகப்பெரிய திருமண மண்டபங்கள் பதிவு செய்யப்பட்டு வரவேற்பு, திருமணம் என்ற நிகழ்வுகள் நடக்கும். உறவினர்கள், நண்பர்கள் என தொடங்கி ஏராளமானோர் அழைக்கப்பட்டு விருந்து நிகழ்வு தொடங்கி ஏராளமான வைபவங்கள் நடக்கும்.
கரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் அதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. புதுவை ஜீவா நகரை சேர்ந்த கணேஷுக்கும் சோலை நகரை சேர்ந்த ரஞ்சனிக்கும் இன்று (மார்ச் 27) கடலூர் திருவந்திபுரம் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதனால், புதுவையில் எளிய முறையில் வாழைக்குளம் செங்கழுநீரம்மன் கோயிலில் இன்று குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் திருமணம் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம்-பூ கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் கொடுத்து வரவேற்கப்பட்டது.
மணமகன், மணமகள், புரோகிதர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். வழக்கமாக, திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம், வீடியோவில் அழகாக இருக்க வேண்டும் என பூ-பட்டுப் புடவைகளுடன் அலங்காரத்துடன் காணப்படுவார்கள்.
ஆனால், கரோனா தொற்று காரணமாக மிக எளிமையுடன் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
மேள, தாளம் முழங்க பாரம்பரிய மந்திரங்கள் ஒத திருமண விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களுக்கு எந்த உணவு விருந்து, காபி, குடிநீர் எதுவும் வழங்கப்படவில்லை. விழா முடிந்த 10 நிமிடங்களில் அனைவரும் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.
விழாவில் வந்தோருக்கு தாம்பூலம் கூட தரப்படவில்லை. ஏனெனில், விழாவில் பங்கேற்ற அனைவரும் இரு தரப்பையும் சேர்ந்த நெருங்கிய குடும்பத்தினர் தான். அவர்கள், "திருமண வரவேற்பு நிகழ்வை சனிக்கிழமையன்று புதுச்சேரியில் திருமண மண்டபத்தில் செய்திருந்தோம். கரோனா அச்சத்தால் அது ரத்தானது. மொத்தமாக, ஒரு மணி நேரத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT