Published : 27 Mar 2020 07:43 AM
Last Updated : 27 Mar 2020 07:43 AM
கோயம்பேடு சந்தைக்கு இன்றுமுதல் 2 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்தை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புநடவடிக்கையாக நாடு முழுவதும்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவாசிய பொருட்கள் தடையின்றிகிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள்வழக்கம் போல் இயங்கும் என்றுதமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி,பழம், பூ விற்பனை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கோயம்பேடு வணிக வளாக காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடப்போவதாக பெருநகர வளர்ச்சிகுழுமத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் அளிக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்றைய தினம் கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வருவதைவிட கூடுதலான லாரிகளில் தக்காளி வந்தது.
இந்நிலையில், விடுமுறை விடப்போவதாக பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அளித்த கடிதத்தை கோயம்பேடு வணிக வளாக காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக, கோயம்பேடு வணிக வளாக காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் கூறும்போது, “காய்கறிகள் அத்தியவசிய தேவை என்பதால் அரசின் கோரிக்கையை ஏற்று 2 நாள் விடுமுறையை வாபஸ் பெற்றுள்ளோம். எனவே, கோயம்பேடு சந்தை வழக்கம் போல் செயல்படும்" என்றார்.
இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமஉறுப்பினர் செயலர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, "கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை என்று வரும் தகவல்கள் உண்மையல்ல. பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழக்கம்போல் கோயம்பேடு சந்தை இயங்கும்" என்றார்.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் நெருக்கமாக நிற்பதை தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கோயம்பேடு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் கூறும்போது, “கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக பொதுமக்கள் இடைவெளி விட்டு காய்கறி வாங்குவதை உறுதி செய்ய 1 மீட்டர் இடைவெளியில் கடைகள் முன்புகோடுகள் வரையப்பட்டுள்ளன. அதில், நின்றுதான் பொதுமக்கள்இனி வரும் நாட்களில் பொருட்களை வாங்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT