Last Updated : 27 Mar, 2020 07:21 AM

4  

Published : 27 Mar 2020 07:21 AM
Last Updated : 27 Mar 2020 07:21 AM

கரோனாவுக்கு எதிரான போர்.. தன்னலமற்ற தம்புவின் சமூக சேவை!

தான் வளர்க்கும் நாட்டு மாடுகளுடன் தம்பு

கரோனா என்னும் அரக்கனை விரட்ட, அரசோடு மருத்துவர்களும், செவிலியர்களும் இணைந்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உறுதுணை புரியும் வகையில், தங்கள் இல்லத்திருமணத்தைக் கூட்டம் சேர்க்காமல் வீட்டுக்குள்ளேயே நடத்திக்கொள்வது, சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது என்று பலரும் தங்களால் முடிந்த நற்காரியங்களைச் செய்துவருகிறார்கள். அந்த வரிசையில், அதைவிட பல மடங்கு சேவைகளைச் செய்துவருகிறார் கடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் துரைராஜ் என்கிற மகேஷ்(47).

இவரை துரைராஜ் என்றாலோ, மகேஷ் என்றாலோ யாருக்கும் தெரியாது. ‘தம்பு’ என்றால் கடலூரைச் சேர்ந்த அனைவருக்கும் இவர் முகம் பகலவனாய் பளீரிடும். அந்த அளவுக்கு தன்னலமற்ற சேவைகளில் கடலூரின் முகம் இவர். கடலூர் அருகில் உள்ள பூச்சிமேடு கிராமத்தின் பெரும் நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கடலூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள், அச்சகம் உள்ளிட்ட பல இடங்கள், ஒரு காலத்தில் இவரது குடும்பத்துக்குச் சொந்தமானவை. அவற்றை அரசுக்காக இலவசமாக விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இளம் தொழிலதிபரான தம்பு,பெரிய குடும்பம் என்று சமூகத்திலிருந்து விலகியிருக்காமல், சமூகத்தோடு இரண்டறக் கலந்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறார் .சுனாமியின்போது சொந்த வாகனத்தில் கிராமம் கிராமமாகச் சென்று, சிதைந்து கிடந்த சடலங்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, பிரேதப் பரிசோதனை செய்வித்து நல்லடக்கம் செய்தது, அரசு உதவிக்கு வரும்வரை காத்திராமல் அனைத்து கிராமங்களுக்கும் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்தது, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை கிடைக்கச்செய்தது என்று பல்வேறு சேவைகளைச் செய்தவர். அப்போது இரண்டரை கோடி ரூபாயை சேவைக்காக செலவழித்தவர்.

'தானே' புயலின்போதும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டது, அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தது, பலருக்கும் வீடுகள் கட்ட உதவியது என்று பல்வேறு உதவிகளைச் செய்தார். அப்போது மீட்புப் பணிகளை கவனிக்க வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் 30 பேரையும் தனதுவீட்டில் தங்கவைத்து அவர்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொடுத்து அரசின் பாராட்டைப் பெற்றவர். கடலூர் மாவட்டத்துக்கு வரும் உயர்அதிகாரிகள் யாராக இருந்தாலும் உதவிக்கு இவரைத்தான் நாடுவார்கள்.

அந்த அளவுக்கு சேவைப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள தம்பு, கரோனாவுக்கு எதிராகவும் களமிறங்கியிருக்கிறார். தன்னுடைய தொழில்களை மையமாக வைத்து அரசுக்கு உதவிவருகிறார். முதல் கட்டமாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள இவரது பெட்ரோல் நிலையத்துக்கு வருகிறவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. கரோனா எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு வாகனங்கள் பழுதானால், எவ்வித கட்டணமும் இல்லாமல் உடனுக்குடன் பழுதுநீக்கித் தருவதாக அரசுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

டாடா மோட்டார்ஸ், மகேந்திரா மோட்டார்ஸ் ஆகிய 2 மோட்டார் நிறுவனங்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் பிரிவுகள் இவரிடம் இருக்கின்றன. இவற்றில், வாடிக்கையாளர்கள் ஓட்டிப்பார்ப்பதற்காக இருக்கும் அனைத்து டெமோ கார்களையும் அரசு அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்களின் தேவைக்காக ஒப்படைத்துள்ளார். கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் இவரது குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்திலிருந்து குடிநீர் கேன்கள் இலவசமாக சப்ளை ஆகின்றன. அலுவலர்களுக்கு உணவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படியாகக் கரோனா எதிர்ப்புப் போரில் இன்னும் என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்யத் தயாராகக் காத்திருக்கிறார் தம்பு.

“இது என்னங்க பிரமாதம். இன்னும் எத்தனையோ சேவைகளைச் செய்தவர் தம்பு” என்றுசொல்லும் கடலூரைச் சேர்ந்த சமூகஆர்வலரான பிரகாஷ், “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எல்லா நாளுக்கும் அத்தனை பேருக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்து கொடுத்தார். அந்தப் போராட்டத்துக்குப் பின்னர்,இவர் நடத்திவரும் 13 திரையரங்குகளிலும் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இளநீர் போன்றவைதான் விற்கப்படுகின்றன. தனது கிருஷ்ணாலயா தியேட்டருக்குக் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு இலவசமாகப் பால் தருவது, தொட்டில் கட்டிவைப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி, டெங்கு காய்ச்சல் காலங்களில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கல் என்று அசத்தி வருகிறார் தம்பு.

தனது நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்குவதுடன், அவர்கள் வீட்டுகுழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் உதவி வருகிறார். அவர்களின் இல்லங்களில் நடக்கும்திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் நிதியுதவி செய்கிறார். அபயம் தேடி வரும் அபலைகளுக்குத் தன்னுடைய நிறுவனங்களில் வேலை அளித்து, அவர்கள் தங்கவும் இடமளித்து ஆதரவு தருகிறார். உதவி என்று வரும் பொதுமக்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்து அனுப்புவார். கோயில் திருப்பணிக்காக யார்வந்தாலும் இயன்ற நிதியைக் கொடுப்பார். ஆனால், இவர்களுக்கு இதைச் செய்தேன் என்று ஒருநாளும் யாரிடமும் சொன்னது கிடையாது.

இப்போது கடலூர் வர்த்தகர் சங்கத் தலைவராகியிருக்கும் தம்பு, பெரிய கடைகளின் வாசலில் கைகழுவ தண்ணீர் வைத்து வாடிக்கையாளர்களை கைகழுவச் செய்யஏற்பாடு செய்திருக்கிறார். வர்த்தகர்களின் நலனுக்காகவும் பலவிததிட்டங்களைத் தீட்டியிருக்கிறார். கந்துவட்டி, மீட்டர் வட்டி என்றுவட்டியால் அவதிப்படும் வியாபாரிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் அட்டை வாங்கித்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் மூலம் வாரத்துக்கு ரூ.30 ஆயிரம் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும். தன்னுடைய வீட்டில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளிடமிருந்து கிடைக்கும் பாலில் தங்கள் தேவைக்குப்போக, மீதமுள்ள பாலைத் தெருவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கிவிடுகிறார். கரோனாவால் இப்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகிறார்” என்றார்.

இப்படி சேவையுள்ளம் கொண்டதம்புவிடம் பேச அவரைத் தொடர்புகொண்டோம். “நியூஸெல்லாம் எதுவும் வேண்டாம் சார். மொதல்ல கரோனா எதிர்ப்புப் பணிகளைப் பார்ப்போம். அதை முழுசா செஞ்சு முடிச்சுட்டா அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர், சற்று நேரத்தில் மீண்டும் அழைத்து, “கற்பூரவல்லி எங்காவது கிடைத்தால் கொஞ்சம் தகவல் சொல்லுங்கள். இங்கே முக்கியமாகத் தேவைப்படுது” என்று கேட்டுக்கொண்டார்.

பிறரது சேவையில் தங்களைக் கரைத்துக்கொள்ளும் தம்பு போன்றோர் இருக்கும் வரை, கரோனா போன்ற சவால்களைச் சமாளிக்கும் தெம்பு நமக்கு நிச்சயம் இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x