Published : 27 Mar 2020 06:40 AM
Last Updated : 27 Mar 2020 06:40 AM

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 85,000 பேரை தனிமைப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவு- தீவிர கண்காணிப்பில் மதுரை, ஈரோடு

சென்னை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்துதமிழகம் வந்த 85 ஆயிரம் பேரைகண்காணிக்கவும் மதுரை, ஈரோடுமாவட்டங்களை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர், டெல்லியில் இருந்து ரயிலில் வந்த உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த20 வயது இளைஞர் ஆகியோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும்அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 4பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும்அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என சென்னையில் மட்டும் 11 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவைதவிர திருநெல்வேலி மற்றும் வாலாஜாபாத் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சேலம்அரசு மருத்துவமனையில் இந்தோனேசியர்கள் உட்பட5 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் 2 பேரும் ஈரோடு பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரும் என மொத்தம் 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனதமிழகம் முழுவதும் 16 ஆயிரம்பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த இந்தோனேசியர்கள், தாய்லாந்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால்தான் மதுரையில் உயிரிழந்த 54 வயதுடையவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அவ்விரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடமாடிய மதுரை, ஈரோடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 85 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களை சென்னை,திருச்சி, மதுரை, கோவை விமானநிலையங்களில் இருந்த மருத்துவக் குழுவினர் மூலம் அறிகுறிகள் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தினர். தேவைப்படுவோருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் பொறியாளருக்கு விமான நிலைய பரிசோதனையின்போது அறிகுறிகள் இல்லை. அவர் வீட்டுக்குச் சென்ற 3 நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அதனால், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 85 ஆயிரம் பேரை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டஅனைத்து விவரங்களும் அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன், சுகாதாரத் துறை இணைந்து வெளிநாடுகளில் இருந்து வந்த யாருக்கெல்லாம் அறிகுறிகள் உள்ளது. அறிகுறிகள் இருப்பவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என அனைத்து விவரங்களையும் சேகரிக்க உள்ளனர். தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்படும்.

இதேபோல் இந்தோனேசியர்கள், தாய்லாந்தைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சென்று வந்த மதுரை, ஈரோடு மாவட்டங்கள் தீவிரகண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. யாரெல்லாம் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x