Last Updated : 27 Mar, 2020 06:34 AM

 

Published : 27 Mar 2020 06:34 AM
Last Updated : 27 Mar 2020 06:34 AM

கதவைத் தட்டும் கரோனாவை வீட்டுக்குள் இருந்தே விரட்டியடிப்போம்

சென்னை

‘தமிழகத்தில் கரோனாவுக்கு முதல் பலி’ பதைபதைக்க வைக்கும் இந்தச் செய்தியோடுதான், மார்ச் 25-ம் தேதி தமிழகம் கண் விழித்தது. உயிரிழந்தவருக்கு உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் அதிகமாக இருந்ததாகக் கூடுதல் தகவல்களைத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறக்காமல் குறிப்பிட்டார்.

முதல் பலி எனும் பதமே, இந்தக் கொடூரம் இனியும் தொடரலாம் என்பதுதான் தமிழகத்தை வாட்டும் மிகப் பெரிய அச்சமாக உருவாகியிருக்கிறது. வெளிமாநிலங்களுக்குச் சென்றுவந்த பின்னணி இல்லாத, முதல் கரோனா தொற்று நோயாளியே மரணமடைந்திருப்பது கூடுதல் கவனத்துக்குரிய விஷயம்.

இறந்த நபர், தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றெல்லாம் வரும் செய்திகள் பதறவைக்கும் நிலையில், “கரோனா நோயின் பாதிப்பால் ஓர் உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த நம்பிக்கையும் தகர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் வீடுகள் முன் ஸ்டிக்கர் ஒட்டுவது, மாநில, மாவட்ட எல்லைகளை மூடுவது என்று அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இவையெல்லாம் முன்கூட்டியே எடுக்கப்பட்டிருக்க வேண்டியவை என்றே பலரும் சொல்கிறார்கள்.

புரிதல் இல்லை

“20 நாட்களுக்கு முன்பே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தால், தமிழகம் ஓரளவுதப்பித்திருக்க முடியும். நமக்கெல்லாம் ஒன்றும் வந்துவிடாது எனும் மனநிலை, மத்திய அரசிடமும், தமிழக அரசிடமும் இருந்தது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் 144 தடை உத்தரவை அமல்படுத்தும் சமயத்தில், பிரதமர் திடீரென 21 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்திருப்பதும் கரோனா போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கூட மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான புரிதல்இல்லாததையே இது வெளிப்படுத்துகிறது.

கரோனா தொற்றுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குக் கூட உரிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. சாதாரணமுகக்கவசங்களே வழங்கப்படுகின்றன.

அது முகம், கழுத்து போன்றபாகங்களை முழுமையாக மறைக்காது. தவிர 8 மணி நேரத்துக்குத்தான் இவற்றை அணிந்திருக்க முடியும். பின்னர், புதிய செட் தேவைப்படும். இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்களே அவற்றைக் கொண்டுவருமாறும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

கரோனா காரணமாக, சக மனிதர்களிடையே சந்தேகமும் அவநம்பிக்கையும் உருவாகியிருப்பது துரதிருஷ்டவசமானது. ஊட்டியில், கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று சற்று தள்ளி நிற்கச் சொன்ன கூலித் தொழிலாளியை ஒருவர் வெட்டிக் கொன்றிருக்கிறார்.

புரிதலின்மையால் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 21 நாட்களுக்கான முழு ஊரடங்கை பிரதமர் அறிவித்த பிறகும் நமக்குள் அந்த கட்டுப்பாடு வந்ததாக தெரியவில்லை.

கரோனா ஆபத்தை முழுமையாக உணராமல் இன்னமும் மக்கள் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். லட்சம் பேருக்கு கரோனா தொற்று பரவ 67 நாட்கள் ஆனது.

அடுத்த ஒரு லட்சம் பேருக்கு பரவ 11 நாட்கள் ஆனது. அடுத்த ஒரு லட்சம் பேரை நான்கே நாட்களில் பற்றிக் கொண்டது கரோனா. நமக்கு முன்னே இருக்கும் இந்த அபாய பாடத்தை புரிந்துகொண்டு வீட்டுக்குள் இருப்போம். கரோனாஒழிப்பில் அரசுடன் ஒத்துழைப் போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x