Published : 26 Mar 2020 05:11 PM
Last Updated : 26 Mar 2020 05:11 PM
கோவையில் சாலையில் சுற்றியவர்களுக்கு போலீஸார் நூதன தண்டனை அளித்தனர்.
கோவை கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பு அருகே இன்று (மார்ச் 26) காலை காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான கருமத்தம்பட்டி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 6-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் இடைவெளி விட்டு நிறுத்தினர்.
கரோனா வைரஸ் குறித்தும், 144 தடை எதற்காக போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டனர். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை.
பின்னர், போலீஸார் கரோனா வைரஸ் குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், அதற்காகத்தான் ஊரடங்கு போடப்பட்டுள்ளது என்றும் அவர்களிடம் தெரிவித்தனர். அடுத்து வருபவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டுத்தான் நீங்கள் செல்ல வேண்டும் என போலீஸார் நூதன தண்டனை வழங்கினர்.
பின்னர், அடுத்து வந்த மேலும் சிலரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் முதலில் வந்த 6-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ், ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு முதலில் வந்தவர்கள் சென்றனர்.
இவ்வாறு அடுத்தடுத்து சாலையில் சுற்றி சிக்கும் நபர்களிடம், முன்பு வந்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டுச் சென்றனர்.
மேலும், முகக் கவசம் இல்லாதவர்களுக்கு அதை போலீஸார் வழங்கினர். அவ்வழியாக முகக் கவசம் இல்லாமல் வந்த திருமண ஜோடிக்கு முகக் கவசத்தை போலீஸார் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT