Published : 26 Mar 2020 05:02 PM
Last Updated : 26 Mar 2020 05:02 PM
கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையாக சிறப்பு வேண்டுகோள் மற்றும் தொழுகை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கை:
''உலக அளவில் கரோனா பலி 21 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஆகவும் பலி எண்ணிக்கை 11 ஆகவும் அதிகரித்துவிட்டது .
கரோனா வைரஸ் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இந்தச் சூழலில் நம்மையும் காப்பாற்றி நம்மைச் சுற்றியுள்ளோரையும் காப்பாற்ற முன்னுரிமை அளிப்பதற்கான சில வழிகாட்டல்கள்.
1. பள்ளி வாசல்களில் இமாம் மற்றும் பணியாளர்கள் மட்டும் ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றுங்கள். பொதுமக்கள் மார்க்கம் கற்றுத் தந்துள்ளதுள்ள சலுகையைப் பயன்படுத்தி வீட்டில் ஜமாஅத்தாகத் (கூட்டாக) தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
2. ஜும்ஆ பற்றிய சிறு விளக்கம் .மஸ்ஜித்களில் பணியாளர்கள், வீட்டில் பொதுமக்கள் லுஹர் தொழுது கொள்ளுங்கள்.
3. மார்க்க அறிஞர்கள் மார்க்க கற்கைகள் மற்றும் பயான்கள் (உபதேச உரைகள்) ஒன்றுகூடலை நிறுத்தி வையுங்கள்.
4. மார்க்கப் பணி செய்யும் அன்பர்கள் பயான் மற்றும் ஒன்றுகூடலைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். மஸ்ஜிதுகளுக்கு அழைப்பார்களை அனுப்புவது மற்றும் தங்குதலை நிறுத்தி வையுங்கள் .இச்சமயம் இதுவே மார்க்கப் பணி என்பதை உணருங்கள்.
5. வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் திரும்பியவர்கள் இருப்பின் மருத்துவரிடம் காண்பித்து அரசு வழிகளைப் பின்பற்றுங்கள்.
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை மஸ்ஜிதுகள் மதரஸாக்களைப் பூட்டுவது என்று திரிப்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். மக்களின் உயிர் விலை மதிப்பற்றதாகும்.
6.பல்வேறு இயக்கங்களின் தன்னார்வத் தொண்டர்கள் சேவையின்போது தற்காப்புக் கவசங்களை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.
நோயில் இருந்து பாதுகாப்பு பெற தனித்திருத்தல் எனும் வழியை அல்லாஹ் தான் அறிவுறுத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம்''.
இவ்வாறு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மௌலானா எம்.முஹம்மது மன்சூர் காஸிமி, அல்ஹாஜ் எம். பஷீர் அகமது ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டமைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட், ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT