Published : 26 Mar 2020 03:56 PM
Last Updated : 26 Mar 2020 03:56 PM
கரோனா பாதிப்பில் அனைவரும் தவித்து வரும் நிலையில், தனக்குரிய பங்கு வேண்டாம் என்றுகூறி சீர்காழி தனியார் பள்ளி இயக்குனர் கல்விக் கட்டணத்தைக் குறைக்கும்படி கோரியுள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியில், அப்பகுதி பெற்றோரின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முழுமதி இமயவரம்பன். இவர் பங்குதாரராக இருக்கும் எழில்மலர் மெட்ரிகுலேசன் பள்ளியில் வரும் கல்வியாண்டில் அவருக்குரிய பங்கு எதுவும் தேவையில்லை என்றும், அப்பணத்தை மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் குறைத்துக் கொள்ளும்படியும் பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
முழுமதி இமயவரம்பனிடம் இதுகுறித்துப் பேசியபோது, ''ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் தங்கள் குடும்பப் பொருளாதாரத்தை சரி செய்யக் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். அந்த நேரத்தில்தான் பள்ளிகளும் திறக்கப்படும். அப்போது ஏழை மற்றும் நடுத்தரப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பிற்குப் பணம் கட்ட சிரமப்படுவார்கள்.
இதற்கு நம்மால் என்னசெய்ய முடியும் என்று யோசித்தபோதுதான் எங்கள் எழில்மலர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணக் குறைப்பு செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் பள்ளியில் என்னையும் சேர்த்து ஏழு பேர் இயக்குனர்கள். அத்தனை பேரும் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்பதால் முதல்கட்டமாக இந்த ஆண்டு எனக்குரிய பங்கு தேவையில்லை என்று முடிவெடுத்து அறிவித்து விட்டேன். மற்ற இயக்குனர்களும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
மற்ற பள்ளிகளை விட மிகமிகக் கட்டணம் குறைவு என்பதால் இங்கு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு இப்பயன் போய்ச் சேரட்டும், அவர்களின் சிரமம் கொஞ்சம் குறையட்டுமே'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT