Published : 26 Mar 2020 03:08 PM
Last Updated : 26 Mar 2020 03:08 PM
சென்னையில் கரோனா தொற்று காரணமாக முன் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி வீட்டில் உள்ளவர்கள் அவசரப் பிரச்சினைகளுக்காக உடனடியாக அணுக சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று நடவடிக்கைக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 21 நாள் ஊரடங்கு மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி எடுத்து வருகிறது.
பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. சென்னையில் ஆதரவற்றோர், வெளியிடங்களில் வந்து பணியாற்றி சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள், வீடற்றவர்கள் உள்ளிட்டோர் ரயில் சேவை நிறுத்தப்பட்டதன் காரணமாக மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி வெளிநாடுகளிலிருந்து சென்னைக்குத் திரும்பிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் இல்லங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களால் வழங்கப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
அதேபோன்று, அவசர உதவி, காய்கறிகளுடன் சேர்ந்து விற்பனை செய்யும் மளிகைக் கடைகளைத் திறப்பது, நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் குறித்த அவசர உதவி, கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கான அவசர மருத்துவ உதவி, முதியோர் இல்லங்கள் குறித்த தேவையான உதவிகளைப் பெற பொதுமக்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள உயரதிகாரிகளிடம் தொடர்புகொள்ள செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
மண்டல ஆணையர் மற்றும் வட்டார அலுவலர் (ஐஏஎஸ் அதிகாரிகள்) செல்போன் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது அந்தப் பகுதிக்கான அவசரத் தேவைக்கான உதவிக்காக மட்டும் அழைக்கப்படவேண்டும். பொதுவான உதவிக்கு வழக்கமான மாநகராட்சி எண் 1913 ஐ அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT