Published : 26 Mar 2020 03:03 PM
Last Updated : 26 Mar 2020 03:03 PM

சில்லறைக் கடைகளில் நாளை முதல் பால் விநியோகம் இல்லை; முகவர்களின் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் விற்பனை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை என, பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சு.ஆ.பொன்னுசாமி இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிவிப்பில், "மெல்ல நின்று கொல்லும் உயிர்க்கொல்லி நோயாக மாறி வரும் கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தியாவில் அதன் பாதிப்புகளை குறைத்திடும் வண்ணம் மத்திய அரசு நேற்று முதல் 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளதை அனைவரும் நன்கறிவோம்.

மக்கள் கூட்டம், கூட்டமாக கூடாமல் சமூகப் பரவலை தடுத்து, ஒவ்வொருவரும் தனித்திருப்பது ஒன்றே கரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக தடுக்கும். அதுவே பொதுமக்களைப் பாதுகாக்கும் என்கிற நிலையில் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு என்கிற இறுதி முடிவை கையில் எடுத்திருந்தாலும் கூட பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடும் என அறிவித்துள்ளது.

ஆனால், மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் பொதுவெளிகளில் கூட்டம், கூட்டமாக கடைகளுக்கு செல்வது, சாலைகளில் பயணிப்பது என கரோனா வைரஸ் தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள ஊடகங்கள் பலவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கூட அவற்றையெல்லாம் பொதுமக்கள் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அஜாக்கிரதையாக செயல்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும், வருமானம் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து கடைகளைத் திறந்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகர்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகிக்க முடியாமல், விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறைக் கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை மட்டும் பால் தங்கு தடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என எங்களது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பால் தட்டுப்பாடு என கூறி வணிகர்கள் எனும் போர்வையில் ஒரு சில சமூக விரோதிகள் 1 லிட்டர் பாலினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகத் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்" என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x