Published : 26 Mar 2020 02:43 PM
Last Updated : 26 Mar 2020 02:43 PM
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் கோயில் முன்பு சாலையில் இளைஞருக்குத் திருமணம் நடைபெற்றது.
கரானோ பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடுமையான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பி.கே.சண்முகம் மகன் முருகானந்தம் (33) என்பவருக்கும், ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த கண்மணி எனும் பெண்ணுக்கும், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில் முன்பு சாலையில் இன்று காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெற்றது.
மணமகன், மணமகள் வீட்டைச் சேர்ந்த பத்துக்கும் குறைவானவர்களும், புகைப்படக்காரர் உள்ளிட்டோர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். அவசர அவசரமாக அர்ச்சகர் தாலியை எடுத்துக் கொடுக்க, சாலையில் நின்றவாறே கோயில் மூலவரைப் பார்த்து மணமகன் தாலியை, மணமகள் கழுத்தில் கட்டினார். மேள தாளம், அட்சதை தூவுதல், குலவைச் சத்தம், உறவினர் வாழ்த்து கோஷம் என எந்த ஆரவாரமுமின்றி திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து மணமகன் முருகானந்தம் கூறும்போது, ''வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டு, கடந்த ஆண்டுதான் ஊர் திரும்பினேன். வந்ததும் சிகை அலங்காரக் கடை வைத்துத் தொழில் செய்து வருகிறேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண மண்டபம் பிடித்து பத்திரிகையும் அச்சடித்தோம். ஆனால், கரோனா பாதிப்பால் மண்டபத்தில் உறவினர்களை அழைத்துத் திருமணம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே சமூக நலன் கருதி, வழிவிடு முருகன் சன்னதி முன்பு சாலையில் நின்று திருமணம் முடித்துள்ளேன்'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய மணமகள் கண்மணி, ''கோயிலுக்குள் திருமணத்தை நடத்த நினைத்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் நின்றவாறே திருமணம் செய்து கொண்டோம். இது வருத்தமாக இருந்தாலும், கரோனாவைத் தடுக்கும் நோக்கில் சமூக அக்கறையுடன் எங்கள் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்'' என்றார்.
சாலையில் நின்று தாலி கட்டிக்கொண்ட மணமக்களை அவ்வழியே வந்த சிலர் வாழ்த்தினர். திருமணமான சில நிமிடங்களில் அவசர அவசரமாக மணமக்கள் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதுபோன்று பரமக்குடி உள்ளிட்ட சில இடங்களில் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணங்கள் வீடுகளிலும், கோயில் முன்பும் மிக எளிமையாக நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT