Published : 26 Mar 2020 07:46 AM
Last Updated : 26 Mar 2020 07:46 AM

ஊரடங்கு உத்தரவை மதிக்காத இளைஞர்களுக்கு நூதன தண்டனை

திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸார்.

திருப்பூர் / உதகை

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி திருப்பூரில் பொதுமக்கள் பலர் சாலைகளில் அநாவசிய பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு செல்வோரால் ஊரடங்கு உத்தரவுக்கான நோக்கம் பாழ்பட்டு விடும் என்பதால், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் புஷ்பா சந்திப்பு, அவிநாசி சாலை, பங்களா பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்து போலீஸார் நாற்காலி போல அமர வைத்தல் உட்பட நூதன தண்டனைகளை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். சில இடங்களில் சாலைகளில் சுற்றியவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு அடித்து விரட்டினர். இன்னும் சிலரை வாகனங்களில் ஏற்றி காவல் நிலையங்களுக்கு ஏற்றிச் சென்று, உரிய விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இதேபோல சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை வீடுகளுக்கு செல்ல போலீஸார் அறிவுறுத்தினர்.

காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மக்களின் நன்மை கருதியே அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அவசியமில்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அரசு உத்தரவை மதிக்காமல் செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

1500 போலீஸார் கூடுதல் பாதுகாப்பு

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மூடப்பட்டுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க மாநகர், மாவட்ட காவல் துறை சார்பில் கூடுதலாக 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், உழவர் சந்தை, நகராட்சி சந்தைகள் இயங்கின.

தடை உத்தரவையும் மீறி மக்கள் வெளியில் நடமாடினர். வாகனங்களும் தடையின்றி இயக்கப்பட்டன. நகராட்சி சந்தைகளில் உள்ள பெரும்பாலான நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டம்கூட்டமாக சந்தைகளில் திரண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அத்தியாவசியத் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என மக்களை எச்சரித்தனர்.

இரு சக்கர வாகனங்களில் தேவை இன்றி வந்த இளைஞர்களை நிறுத்தி, தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை கொடுத்து, வெளியில் சுற்றக் கூடாது என போலீஸார் எச்சரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x