Published : 26 Mar 2020 07:44 AM
Last Updated : 26 Mar 2020 07:44 AM

கோவை மாநகரில் உள்ள ஏழை மக்களுக்கு ஏப்ரல் 16 வரை இலவச உணவு: வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஏழைகளுக்கு நேற்று இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

கோவை

கோவை மாநகரில் உள்ள ஏழை மக்களுக்கு ஏப்ரல் 16-ம் தேதி வரை இலவச உணவு வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. சாலையோரம் வசிப்போர், வெளியூரில் இருந்து வந்து கோவையில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள், ஏழை மக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமுதாய உணவுக்கூடம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் கூறியதாவது: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆகியோரின் உத்தரவின் பேரில் உணவுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இலவச உணவுக் கூடத்தில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாது தொடர்ந்து உணவு வழங்கப்படும். எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி, புளி சாதம், தக்காளி சாதம், அரிசி பருப்பு சாதம், புதினா சாதம் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படும். இந்த வசதியை ஏழை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு உணவுப் பொட்டலங்களை பெற்றுச் செல்ல மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். உணவுக்கூட வளாகத்தில் அமர்ந்து சாப்பிட யாருக்கும் அனுமதி இல்லை. தினமும் 500 முதல் 1,000 பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நேரடியாக வர முடியாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x