Last Updated : 26 Mar, 2020 07:20 AM

 

Published : 26 Mar 2020 07:20 AM
Last Updated : 26 Mar 2020 07:20 AM

போடி அருகே காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கிய பெண்களை மீட்டு முதலுதவி அளித்த மீட்புக் குழுவினர்.

போடி

தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிர்இழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் ஏலக்காய், தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக தமிழகத்தின் கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட கேரள ஜீப்கள் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். கரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக தமிழகஎல்லை மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால், கேரள எல்லையில் குடும்பத்துடன் தங்கியிருந்த பலரும் வனப்பகுதி வழியாக சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.

போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, இவருடைய மனைவி ஜெயஸ்ரீ, இவர்களது மகள் கிருத்திகா மற்றும் உறவினர்கள் சிலர் சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டி பகுதி தோட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

போக்குவரத்து இல்லாததால் போடிமெட்டுப் பகுதியில் இருந்து உச்சலூத்து மலைப்பாதை வழியே நடந்து பிற்பகலில் கீழிறங்கத் தொடங்கினர். தடை செய்யப்பட்ட வனப்பகுதியான இதன் வழியே வஞ்சிரமணி (25) விஜயமணி (45), மகேஸ்வரி (25), ஒண்டிவீரன் (28) மஞ்சுளா (28), லோகேஸ்வரன் (20),கல்பனா (45) ஆகியோரும் சேர்ந்துவந்து கொண்டிருந்தனர்.

அரளியூத்து என்ற இடத்தைநெருங்கியபோது அப்பகுதியில்காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. 5 அடி உயரத்துக்குக் காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததால் உச்சியை நோக்கி வேகமாகதீ பரவியது. புகை அதிகளவில் சூழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பாதையை விட்டு விலகினர்.கரடுமுரடான பகுதியில் வழிதெரியாமல் ஓடினர்.

இதனால், காட்டுத்தீயில் சிக்கிபலரும் பரிதவித்தனர். உடன் மலையடிவாரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு மொபைல்போன் மூலம்தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே காட்டுத்தீயில் தொழிலாளர்கள் சிக்கிய விவரம் வனத்துறைக்குத் தெரியவந்தது.

வனத் துறையினர் அங்கு சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி விஜயமணி (45), இவரது பேத்தி கிருத்திகா (2) ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த அனைவரையும் குழுவினர் மீட்டு டோலி,ஸ்ட்ரெச்சர் மூலம் மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதில் மகேஸ்வரி (25) போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா (36) நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரங்கணி தீ விபத்து

போடி வனச்சரகத்துக்கு உட்பட்ட குரங்கணியில் 2018-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி அத்துமீறி வனப்பகுதிகளுக்குள் சென்று மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டபோது காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் இறந்தனர். அப்போது முதல் இப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் மலையில் தீப்பற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், பிப். 14-ம் தேதி முதல் மலையேற்றத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

குடிநீரின்றி தவித்த மீட்புக்குழு

செங்குத்தான பாறைகள் நிறைந்த பாதை என்பதால் மீட்புக்குழு செல்வதில் சிரமம் இருந்தது. மேலும் இருள் சூழ்ந்ததால் மலையேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கொண்டு சென்ற குடிநீரும் தீர்ந்ததால் தாகத்தில் தவித்தனர். இதையடுத்து மலையடிவாரத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்து மற்றொரு குழுவினர் குடிநீர் கொண்டு வந்து கொடுத்தனர். மேலும் டார்ச், மொபைல் டார்ச் போன்ற எளிய உபகரணம் மூலம் அங்கிருந்தவர்களை இக்குழு காப்பாற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x