Published : 26 Mar 2020 07:10 AM
Last Updated : 26 Mar 2020 07:10 AM
பிரதமரின் அறிவுரைகளை பின்பற்றி 3 வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைதடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் அறிவுறுத்தல்களை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு முடக்கப்படுவது தொடர்பான பிரதமரின் அறிவுரைகளை பின்பற்றி வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக அதை பின்பற்ற வேண்டும். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
நீங்கள் உங்களையும் உங்களின் அன்புக்கு உரியவர்களையும் ஆபத்துக்கு உள்ளாக்காதீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் நலனை பேணுங்கள். ஒன்றரை மீட்டர் விலகி இருத்தல் எனும் சமூக விலகலை பின்பற்றுங்கள், பதற்றமடையாதீர்கள். அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் சவாலான தருணமாகும். வீடுகளில் தங்கியிருந்து பரவலுக்கான தொடர்புகளை தடுப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக வெற்றியடைய முடியும்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதன் மூலம் சமூகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறது.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். இந்த சவாலுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் இணைந்து செயல்படுவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மனிதநேயமும் இந்தியாவும் இந்த போராட்டத்தில் வெற்றி பெறும். இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT