Published : 25 Mar 2020 05:30 PM
Last Updated : 25 Mar 2020 05:30 PM
காய்கறி வாங்க, மருத்துவமனைக்குச் செல்ல என்று ஏராளமான இருச்சக்கர வாகனங்கள் இன்று தேனியில் பல பகுதிகளிலும் சென்றதால் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் பால், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மருந்தகம், மருத்துவமனை திறக்க அனுமதிக்கப்பட்டது.
தேவைப்படுபவர்கள் ஒருவராக வந்து இவற்றை வாங்கிச் செல்லலாம். கூட்டமாக வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பலரிடையே இது குறித்து சுயகட்டுப்பாடு எதுவும் இல்லை.
காலையில் வழக்கம் போல பல பகுதிகளுக்கும் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். பால், இறைச்சி, காய்கறி மற்றும் டீ கடைகளி்லும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி கொள்முதல் செய்தனர்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு சாலைகளில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. போலீஸார் தேனி புதூர் விலக்கு, நேருசிலை, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, எடமால் தெரு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெளியில் வருபவர்களை கட்டுப்படுத்தத் தொடங்கினர்.
ஆனால் பலரும் தாங்கள் மருத்துவமனைக்குச் செல்வதாகவும், காய்கறி வாங்க வந்ததாகவும் கூறினர். தொடர்ந்து பலரும் இதே காரணங்களை சொல்லி விட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இதனால் கோபமடைந்த போலீஸார் ஒருகட்டத்தில் இதுபோன்றவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணியாதது, லைசன்ஸ் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி அபராதம் விதித்தனர்.
இவ்வாறு அபராதம் விதிக்கும் போது ஏராளமான இருசக்கரவாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போலீஸார் அதில் கவனமாக இருந்தனர். இதனைப் பயன்படுத்தி அவ்வழியே ஏராளமான இருசக்கர வாகனங்கள் வேகமாக கடந்து சென்றன.
இதனால் ஊரடங்கு போல் இல்லாமல் வழக்கம் போல பலரும் தங்கள் வாகனங்களில் செல்லும் நிலை இருந்தது. இருப்பினும் மதியத்திற்குப்பிறகு போலீஸார் கடுமையாக எச்சரித்ததால் டூவீலர்களின் எண்ணிக்கை குறைந்தது.
போலீஸார் இது குறித்து கூறுகையி்ல், கடந்த 22-ம் தேதி ஞாயிறன்று நடைபெற்ற சுயஊரடங்கின் போது எந்தக் கடையும் திறக்கவில்லை.
இதனால் பொதுமக்களை எளிதில் கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால் காய்கறி வாங்க வருகிறோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம் என்று சிலர் பொய் சொல்வதால் மற்றவர்களையும் சந்தேகப்பட வேண்டியதுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT