Published : 25 Mar 2020 03:12 PM
Last Updated : 25 Mar 2020 03:12 PM
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிரொலியாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஒன்றுகூடுதலைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுதாத நிலையைக் கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் தேர்வுகள் இல்லை என அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் தற்போது 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதேபோன்று கடைசி நாளான நேற்று மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுத முடியாமல் போனதால் அதைக் கருத்தில் கொண்டு வேறொரு நாளில் தனியாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
“தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நேற்று (24.3.2020) மாலை 6 மணி முதல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (25.3.2020) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. 24.3.2020 (கடைசித் தேர்வு) அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் சில மாணவர்கள், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுதச் செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்குக் கொண்டு வந்ததைக் கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்தவும், இத்தேர்வுக்கான தேதியைப் பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்.
2. மேலும், கரோனா நோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்.
3. தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT