Published : 25 Mar 2020 11:48 AM
Last Updated : 25 Mar 2020 11:48 AM
கரோனா வைரஸை விரட்ட கசப்பு மருந்து ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிப்போம் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்திருக்கிறார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த 3 வார ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கும் மேலாக நான் வலியுறுத்தி வந்த நிலையில், அதை பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. கரோனா வைரஸைத் தடுப்பதற்கு மிகச்சிறந்த நடவடிக்கை இது ஆகும்.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் எதார்த்தமானவை; தீர்க்கமானவை.
'21 நாள் ஊரடங்கு உத்தரவு கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான உறுதியான போரில் அவசியமான நடவடிக்கை ஆகும். இது மக்கள் ஊரடங்கை விட சில படிகள் மேலானது; கடுமையானது. இதை நீங்கள் பின்பற்றியே தீர வேண்டும். இந்த விஷயத்தில் சிலரின் அலட்சியம், சிலரின் தவறான யோசனைகள் உங்களையும், குழந்தைகளையும், பெற்றோரையும், குடும்பத்தையும், நண்பர்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்திவிடும்.
ஆகவே, ஊரடங்கு ஆணை காலத்தில் உங்கள் வீட்டுக்கு வெளியில் நீங்கள் எடுத்து வைக்கும் ஓர் அடி கூட உங்கள் வீட்டுக்கு கரோனா பெருந்தொற்று நோயை அழைத்து வந்து விடும்' என்று பிரதமர் கூறியிருப்பது 100% உண்மையாகும். இதைத் தான் கடந்த 10 நாட்களாக பாமக ஆலோசனையாகவும், எச்சரிக்கையாகவும் கூறி வந்தது.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு என்பது சுதந்திர இந்தியாவில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். ஆனாலும், கரோனா என்ற பேரழிவை முறியடிக்க இதைத் தவிர வேறு வழியில்லை. 21 நாட்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது மிகக்கடினமான செயல்தான்; இது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இன்றைய சிக்கலான சூழலில் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். போர்க்களத்துக்குச் செல்லும் வீரர்கள் எத்தனை மாதங்கள் ஆனாலும், ஆண்டுகள் ஆனாலும் களத்தை எதிர்கொண்டு தான் தீர வேண்டும்; போர்க்களத்தில் தங்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவை மட்டுமின்றி, வாழ்க்கை இழப்பையும் வீரர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவ்வளவு ஏன்?... கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத்துறையினர் என பல லட்சக்கணக்கானோர், நாம் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இரவு, பகலாக, ஓய்வு, உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இதற்காக சலித்துக்கொள்வதில்லை.
அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் கடைப்பிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது ஒரு பொருட்டே அல்ல. கரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா பரவினால் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் உயிருடன் இருக்க மாட்டார்கள். நாம் நமது நண்பர்களையும், உறவினர்களையும் கூட இழக்க நேரிடலாம். ஆகவே, வருமுன் காப்பது தான் சிறந்தது. அதற்கான கசப்பு மருந்துதான் 21 நாள் ஊரடங்கு. அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என்பது போன்ற தவறான நம்பிக்கைகளும், அலட்சியமும், பிரதமர் கூறியதைப் போல நம்மையும், நாட்டையும் மிகப்பெரிய ஆபத்தில் ஆழ்த்தி விடும்.
அதிலும் குறிப்பாக கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கிராமங்களுக்குச் சென்றுள்ளதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முதன்முதலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கடந்த 7-ம் தேதி அடையாளம் காணப்பட்டார். 17-ம் தேதி அவர் முழுமையாக குணமடையும் வரை, அதாவது அடுத்த 11 நாட்களுக்கு வேறு எவருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. இரண்டாவது நோயாளி 18-ம் தேதி அடையாளம் காணப்பட்டார். ஆனால், அடுத்த 6 நாட்களில் கூடுதலாக 16 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் பார்த்தால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தொட 45 நாட்கள் ஆன நிலையில், கடந்த 10 நாட்களில் 450 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸின் வேகம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை உணர்ந்து மக்கள் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் கிராமங்களுக்குச் சென்றவர்களாக இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன் மூலம் கரோனா வைரஸ் நெருப்புச் சங்கிலியை அறுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். கரோனா கிருமியை இந்தியர்கள் அனைவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு வெற்றிகொள்ளப் போராட வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT