Published : 25 Mar 2020 07:39 AM
Last Updated : 25 Mar 2020 07:39 AM
செய்தித்தாள், ரூபாய் நோட்டுகள், உணவுப் பொருட்களைப் பேக்கேஜ் செய்து வரும் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
செய்தித்தாள்கள் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் கடந்த வாரமே தெரிவித்துவிட்டதாக வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான் கூறியுள்ளார்.
‘தி பிரிண்ட்’ என்ற இணைய இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இந்தத் தகவலை பேராசிரியர்தெரிவித்துள்ளார். மேலும் அவர்கூறியதாவது:
இன்றைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதற்குச் சாத்தியமுள்ள வழிகளை நோக்கும்போது, செய்தித் தாள்கள் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.
செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலோ, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தாலோ மட்டும்தான் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மருத்துவரான நான்இப்போதும் அன்றாடம் செய்தித்தாள்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இவ்வாறு டி.ஜேக்கப்ஜான்கூறியுள்ளார்.
அதேநேரம், ஒருவேளை நீங்கள் படித்த செய்தித்தாள் வழியாக வைரஸ் பரவும் என்ற சந்தேகம் இருந்தால், செய்தித்தாள் படித்த பிறகு சோப்பு போட்டு நன்றாகக் கையைக் கழுவினால் போதும். பிறகு வைரஸைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், ‘இந்து குழுமம்’ சார்பில் வெளியாகும் இதழ்களைப் பொறுத்தவரை அதன் தயாரிப்பு நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் கிருமிநாசினிகளை பயன்படுத்திய பிறகே வெளிவருகிறது. விநியோகம் செய்பவர்கள் எப்படிக் கவனமாக நாளிதழை வாசகர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால்தான் ‘இந்து குழும’ நாளிதழ்கள் பாதுகாப்பாக வாசகர்கள் கைக்கு வந்து சேர்கிறது. எனவே, நாளிதழ் வழியாக வைரஸ் பரவும் என்ற அச்சம் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT