Published : 24 Mar 2020 10:34 PM
Last Updated : 24 Mar 2020 10:34 PM
இன்று நாட்டு மக்களுக்காக வானொலியில் உரையாற்றிய பிரதமர் 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
நாடெங்கும் கடுமையான ஒரு சூழலில் உள்ள நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அரசு எந்திரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பைத் தடுக்க 144 தடை உத்தரவை இன்று மாலை முதல் தமிழக அரசு அமல்படுத்தியது.
பின்னர் இரவு 8 மணிக்கு பேசிய பிரதமர் மிக உருக்கமாக ஆணித்தரமாக பல கோரிக்கைகளை பொதுமக்களுக்கு வைத்தார். தயவுசெய்து 21 நாட்கள் ஊரடங்கை நாமெல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கரோனா வைரஸை ஒன்றுபட்டு முறியடிப்போம் என்று தெரிவித்தார்.
பிரதமரின் கருத்தை ப.சிதம்பரம், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். பிரதமரின் அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முகநூல் பதிவு:
“கரோனா வைரஸின் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் கடைப்பிடிக்கச் சொன்ன ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நமக்கு நாமே இதனைச் சட்டமாக்கிக் கொள்வோம்.
நோய் பரவாமல் தடுக்க இதைத் தவிர மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT