Published : 24 Mar 2020 09:37 PM
Last Updated : 24 Mar 2020 09:37 PM
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிய 584 பேர் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பியவர்களை கண்டறியும் பணிகளில் அரசுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையில் அந்தவகையில் கண்டறியப்பட்ட வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகளால், தனிமைப்படுத்தப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 584 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுகிறது.
இதன் ஒருங்கிணைப்பு அலுவலராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டும், கரோனா வைரஸ் பற்றி சந்தேகங்கள், புகார்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் 24 மணிநேர கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் (வருவாய்த்துறை) ஆகியோர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், சந்தேகங்கள் மற்றும் அவ்வப்போது அரசிடமிருந்து பெறப்படும் உத்தரவுகள், அறிவுரைகளை கண்காணித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், ஒருங்கிணைப்பு அலுவலராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல்துறையிலுள்ள 412 உரிமைகோரப்படாத வாகனங்களை வரும் 31- தேதி மற்றம் ஏப்ரல் 1-ம் தேதிகளில் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் அரசு 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால், வாகனங்களை மேற்கண்ட தேதிகளில் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் விடும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் இது சம்மந்தமான விபரங்களை தெரிந்து கொள்ள காவல்துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண். 0462-2970161 தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT