Published : 24 Mar 2020 09:10 PM
Last Updated : 24 Mar 2020 09:10 PM
கூடங்குளம் 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பைth தடுக்கும் வகையில் கூடங்குளம் அணுஉலைகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி செய்வதையும், கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து 3 மற்றும் 4-வது அணுஉலைகளில் கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் 1-வது மற்றும் 2-வது அணுஉலைகளில் மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. 3,4–வது அணுஉலைகளின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமானப்பணிகளில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம்பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வடமாநில தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் அணுஉலை வளாகத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பலநூறுபேர் தினம், தினம் வடமாநிலங்களிலிருந்து வருவதும், போவதுமாக இருந்தனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளம், ராதாபுரம், வள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட சுற்றுப்புற கிராம, நகர பகுதிகளுக்கு அன்றாடம் தங்கு தடையின்றி சென்று வந்தனர்.
கூடங்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளில் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் பெரு நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து அணுஉலை வளாக பகுதிகளில் தங்க வைத்து பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்த வடமாநில தொழிலாளர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் சுற்றுவட்டார பகுதி மக்களால் எழுப்பப்பட்டுவந்தது.
கரோனா நோய் அச்சம் நீங்கும் வரையில் கூடங்குளம் அணுஉலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி செய்வதையும், கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகளை வரும் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆயிரம் வடமாநில தொழிலாளர்களும் அணுமின் நிலைய வளாகத்திலேயே தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணுஉலைகளில் மின் உற்பத்தி பாதிக்காதவாறு இந்திய அணுமின் உற்பத்தி கழக பணியாளர்கள் குறைந்த அளவுக்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அணுமின் நிலைய வளாகத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT