Published : 24 Mar 2020 08:49 PM
Last Updated : 24 Mar 2020 08:49 PM
144 தடை உத்தரவினால் சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு தேனி மாவட்ட எல்லையில் அவர்களின் பயண விபரம் சேகரிக்கப்படுகிறது. மேலும் மருத்துவப்பரிசோதனை செய்த பிறகே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாலை 8 மணிக்குப் பேசிய பிரதமர் ஒட்டுமொத்த தேசத்துக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டார்.
தமிழக அரசின் உத்தரவு நேற்றே வெளியானதால் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை பார்க்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பத் துவங்கினர்.
இந்நிலையில் மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் சுகாதாரம், காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறையினர் முகாமிட்டுள்ளனர். அவ்வழியே மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தடுத்து கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் வாகனங்களில் உள்ளவர்கள் அனைவரையும் கீழே இறக்கி, அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருக்கிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்தனர்.
அவர்கள் எந்த ஊர்களில் இருந்து வருகிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களும் வாங்கப்பட்டது.
இதுவரை மேற்கொண்ட சோதனையில் யாருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT