Published : 24 Mar 2020 08:04 PM
Last Updated : 24 Mar 2020 08:04 PM

வெளிநாடுகளிலிருந்து மதுரைக்கு திரும்பிய 439 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன: ஆட்சியர் டி.ஜி.வினய் தகவல்

மதுரை

கரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளிலிருந்து திரும்பி, மதுரை மாவட்டத்தில் தங்கியுள்ள 439 பேர் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு, சிறப்பு குழு கண்காணித்து வருகிறது என ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: 144 தடை உத்தரவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

இச்சட்டத்தின்படி 5 பேர் ஒரே இடத்தில் கூடக்கூடாது. மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து நிறுத்தப்படும். இதற்காக 20 சாலைகளில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவம் உள்ளிட்ட அரசு அனுமதித்துள்ள அத்தியாவசிய துறைகளைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரும் மாவட்டத்திற்குள் நுழையவோ, நடமாடவோ தடை உள்ளது.

அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வழங்கத் தடை இல்லை. அத்தியாவசதியப் பொருட்களை வாகனங்களில் கொண்டுசெல்லவும் தடை இல்லை. இந்த பொருட்கள் விற்கும் கடைகளைத் திறக்கவும் தடை இல்லை. இதனால் யாரும் பயத்தில் அத்தியாவசிப் பொருட்களையும் மொத்தமாக வாங்கி வைக்க வேண்டிய அவசியமில்லை.

வெளிநாட்டிலிருந்து திரும்பிய 439 பேர் மதுரை மாவட்டத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்ற அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

144 தடை இருந்தாலும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு வசதிகளுடன் பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஷிப்ட் முறையில் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவரும் முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் பணியாற்றுவர். மதுரைக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன. உள்நாட்டு விமானங்களும் நிறுத்தப்படவுள்ளது.

சாலையோர வியாபாரிகள் கடைவிரிக்க அரசு தடை விதித்துள்ளதால் அனுமதிப்படாது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் அனுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x