Last Updated : 24 Mar, 2020 07:26 PM

 

Published : 24 Mar 2020 07:26 PM
Last Updated : 24 Mar 2020 07:26 PM

தேனி காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு: பேருந்துகள் இல்லாததால் காட்டுவழிப்பயணம்- கேரளாவுக்கு வேலைக்குச் சென்று திரும்பியபோது பரிதாபம்

போடி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக எல்லை மூடப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தமிழகத் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் போடி ராசிங்காபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல தீர்மானித்தனர்.

இதற்காக ஜெயமணி, மகேஷ், வஞ்சரமணி, லோகேஷ், ஒண்டிவீரன், மஞ்சு, ஆனந்த், ஜெயஸ்ரீ, கீர்த்திகா உள்ளிட்ட 9 பேர் கேரள மாநிலம் பூப்பாறை பேதொட்டியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.
நண்டாறு, உச்சலூத்து வழியே வந்தபோது கன்னிமார் ஊற்று என்ற இடத்தில் தீபிடித்தது. காய்ந்த புல் அதிகம் இருந்ததால் தீ வெகுவாய் பரவத்தொடங்கியது.

இதில் இந்தத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தப்போஒட முயன்றனர். இது குறித்து ஊரில் உள்ளவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், 108 மருத்துவத்துறை உள்ளிட்டோர் மலையடிவாரத்திற்குச் சென்றனர். மீட்புக்குழுவினர் வனத்திற்குள் சென்றனர். இருட்டத் தொடங்கியதால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு பேர் இந்த காட்டுத்தீயில் சிக்கி இறந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தீ மற்றும் புகையில் மூச்சுத்திணறி ஜெயஸ்ரீ(23), அவரது மகள் கீர்த்திகா(5) ஆகியோர் இறந்ததாகத் தெரிகிறது. 5 பேர் குகைபோன்ற பாதுகாப்பான பகுதியில் உள்ளதாகவும், 2 பேர் வனப்பகுதியில் தவறிச் சென்றுள்ளனர். மீட்பு பணி முடிந்தபிறகுதான் முழுவிபரம் தெரிய வரும் என்றனர்.

இரவு நேரம் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருவதில் குழுவினருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x