Published : 24 Mar 2020 04:41 PM
Last Updated : 24 Mar 2020 04:41 PM

மின்னல் வேகத்தில் பரவுகிறது; நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 24) சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரியக்கையின் மீது ஆற்றிய உரை:

"மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையில்கூட முதல்வர் தாயுள்ளத்தோடு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

கரோனா தொடர்புடைய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், காவல் துறை, பேரிடர் மீட்புத் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் தங்களுடைய உயிரை துச்சமென கருதி, தங்களை இரவு பகலாக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வருடைய கோரிக்கைக்கு ஏற்ப களத்திலே நின்று இன்றைக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, இனி என்றைக்கும் பணியாற்றக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, கவிதை வடிவிலான ஒரு கருத்தை நான் இங்கே பதிய வைக்க விரும்புகின்றேன்.

அழித்தொழிப்போம் உயிர்க்கொல்லியை கரோனா

உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச்சொல்

உலகமே பதறிக் கிடக்கிறது

கண்ணுக்குத் தெரியாத இந்த

உயிர்க்கொல்லியின் வேகத்திற்கு எதிராக

துணிந்து நிற்பது மட்டுமல்ல,

உணர்வால் ஒன்றுகூடி

ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு,

தூர நிற்பதே சாலச் சிறந்தது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு நான் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றபோது, அங்கே காற்று புகாத கவச உடையும் முகக்கவசத்தை அளித்து, தன்னுடைய முகத்திலே அணிந்திருந்த அவருடன் நான் கனிவோடு கேட்டேன். 'உங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா?' என்று. அங்கே முகக்கவசம் அணிந்த, முழு கவசம் அணிந்த மருத்துவர் ஒருவர் சொன்னார், 'சேவை செய்வதே எங்கள் பணி, மனதாரச் செய்கின்றோம்'. ஆனால், அந்த மருத்துவர், 'ஒரேயொரு சிரமம். இந்தக் கவச உடை அணிந்துள்ளதால் தாகத்திற்கு எங்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை' என்று சொன்னார். அப்போது என் கண்களிலே கண்ணீர் நிறைந்தது.

மகத்தான மருத்துவ சேவை கண்டு நான் மலைத்துப் போனேன். இதையெல்லாம் உணர்ந்து நாம் விழிப்போடு இருக்கவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்வர் சார்பிலே அறைகூவல் விடுக்கின்றோம். அசுரத்தனமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால் முதல்வர் அன்புக் கட்டளையிடுகிறார். ஆதரவாகப் பேசுகின்றார். ஆதரவான அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

மக்கள் நலன் காக்க மகத்தான உத்தரவுகளை கணப்பொழுதும் முதல்வர் தொடர்ந்து பிறப்பிக்கிறார். இன்னும் இந்த கரோனா தடுப்பில் முதல்வர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஊன், உறக்கமின்றி, காலநேரம் பாராது, கணப்பொழுதும் ஓயாது, சுற்றிச் சுழன்று மகத்தான சேவை செய்கிறார் முதல்வர். மெச்சுகிறேன் நம் மருத்துவத் துறையை, நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகின்றேன். நம் சேவைகளால், வெல்லட்டும் மனிதன், வீழட்டும் இந்த கரோனா உயிர்க் கொல்லி.

முதல்வர் யாருக்காக புதிய புதிய அறிவுப்புகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்? இந்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கடைக்கோடியில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த தமிழினத்திலே இந்த நோய்த் தொற்று வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதைத்தான் அது காட்டுகிறது.

அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். முதல்வருடைய இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்.

உலக அளவில் 186 நாடுகளில் இந்த நோய் பரவியிருக்கிறது. உலகத்தையே மிகப் பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உலகத்தில் 186 நாடுகளில் பரவியிருக்கிறது. இன்றுவரை பரிசோதனை செய்யப்பட்டதில், 3 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேர் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால், 14 ஆயிரத்து 510 பேர் இறந்திருக்கிறார்கள். இத்தாலியில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறக்கக்கூடிய நிலை இருக்கிறது.

இந்தியாவில் 443 பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நோய் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதற்கு ஒரேயொரு கருத்தைச் சொல்கிறேன். பொதுமக்கள் எந்த அளவுக்கு விழிப்பாக இருக்க வேண்டும், எந்த நிலை என்பது வூஹானில் முதலில் 250 பேருக்கு இருந்தது. 15 நாட்களில் 13 ஆயிரம் ஆனது. அடுத்த 15 நாட்களில் 61 ஆயிரம் ஆகிவிட்டது. அடுத்த 15 நாட்களில் 81 ஆயிரம் ஆகிவிட்டது.

இத்தாலியில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பூஜ்ஜிய நிலையில் இருந்தது, 3 இருந்தது, 4 இருந்தது, 15 நாட்களில் 3,000 ஆக இருந்தது, அடுத்த 15 நாட்களில் 41 ஆயிரம் வந்துவிட்டது.

ஈரானில் தொடர்ந்து நோய் பாதிப்பு இல்லை, பூஜ்ஜியம் என்று புள்ளிவிவரம் போட்டவர்கள், 2,922 என்ற ஒரு புள்ளி விவரம் வெளியிட்டார்கள். அடுத்த 15-வது நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற புள்ளிவிவரம் வந்துவிட்டது.

அமெரிக்காவில் பூஜ்ஜியமாக இருந்தது, 11 ஆக இருந்தது, 15 ஆனது, அதன்பின் 129 என்று எண்ணிக்கை சொன்னார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று சொன்னார்கள். வல்லரசு நாடான அமெரிக்காவையே அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய அளவுக்கு பத்தே நாட்களில் 10 ஆயிரத்து 442 பேருக்கு வந்துவிட்டது.

சமூகத்தில் நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. எல்லோரையும் பாதிக்கிறது. மிகப் பெரிய அச்சம். வயதானவர்களுக்கு, ஏற்கெனவே நோயுற்றவர்களுக்கு இறப்பு நேரிடுகிறது. இந்த உலகத்திலுள்ள அத்தனை நாடுகளில் இருக்கக்கூடிய எல்லாவிதமான அச்சமாக பதற்றமாக எதிர்நோக்க வேண்டிய அவசியத்தை தமிழக அரசு உணர்ந்த காரணத்தினால்தான் இந்த 144 போன்ற தடை உத்தரவுகள். ’

இது அரசினுடைய உத்தரவு. ஏற்றுத்தான் ஆகவேண்டும். இன்றைக்கு 12 ஆயிரத்து 519 பேர் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டுமென்று அரசு சொல்கிறது. மிகவும் பணிவாகச் சொல்கிறோம், அன்பாகச் சொல்கிறோம், சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களிடமிருந்து சமூகப் பரவல் வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் மனைவிக்கு வந்துவிடக் கூடாது. அரசு அரசின் அக்கறைதானே! உங்களிடமிருந்து உங்கள் கணவனுக்கு வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் ஓட்டுநருக்கு வந்துவிடக்கூடாது. அதற்காகத்தான் வீட்டில் தனிமைப்படுத்தி இருங்கள் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இப்பொழுது அரசின் உத்தரவுப்படி நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தே ஆகவேண்டும். காவல்துறை உங்களைக் கண்காணிக்கும். நீங்கள் வெளியில் வரக்கூடாது. வீட்டுத் தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்கிறது. ’

கூடுதலாக 14 + 14 நாட்கள் வீட்டில் இருந்தே ஆக வேண்டும். அது கட்டாயம் என்பது அரசின் உத்தரவு. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. காரணம் சமுகப் பரவல் வந்துவிடக்கூடாது என்பதுதான். அவரிடமிருந்து ஒருவருக்குக்கூட வந்துவிடக்கூடாது என்பதுதான்.

டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கு அந்த நோய் தாக்கம் உறுதியானதை கண்டுபிடித்துவிட்டோம். இரவு-பகல் போராடி அவரோடு பேசியவர்கள், அவரோடு ரயிலில் வந்தவர்கள், டீ சாப்பிட்டவர்கள் சலூனில் வேலை பார்த்தவர்கள், அவர் வீட்டில் இருந்தவர்கள், பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என எல்லோரையும் 193 பேரை தொடர்கிறோம்.

193 பேரும் எனக்கு வந்துவிடுமோ, உனக்கு வந்துவிடுமோ என்ற பதற்றம், பயம், அச்சத்தில் இருக்கிறார்கள். மிகப்பெரிய சவாலான விஷயம். இந்த சவாலை எதிர்கொள்வதற்காகத்தான் முதல்வர் இவ்வளவு வேகமாக, இவ்வளவு துரிதமாக அடுத்தடுத்தகட்ட நடவடிக்கைகளை வேகமாக அரசு செய்துகொண்டிருக்கிறது.

ஆகவே தயவ செய்து இந்தச் சூழ்நிலையில் அரசு பொதுமக்களைப் பார்த்துக்கொள்கிறது. முதல்வர் அனைத்துத் தேவையான எச்சரிக்கையுடன் இருங்கள், கவனமாக இருங்கள், மிகவும் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இன்னும் என்ன செய்யவேண்டுமென்று கேட்கிறார்.

மக்கள் செய்யவேண்டிய ஒரேயொரு விஷயம், ஒத்துழைப்பு. நான் வீட்டில் இருக்கின்றேன், நீங்களும் வீட்டில் இருங்கள். வீட்டிலேயே இருங்கள். விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள், வெளியில் போகாதீர்கள், பயணம் செய்யாதீர்கள்.

தயவுசெய்து எதிர்மறையான கருத்துகளுக்கோ, எதிர்மறையான பேச்சுகளுக்கோ, விவாதத்திற்கோ, இதை இப்படிச் செய்திருக்கலாமோ, இதை அப்படி செய்திருக்கலாமோ, இதை 2 நாட்களுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாமோ, 2 நாட்கள் தாமதமாக சொல்லியிருக்கலாமோ என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.

இன்றைக்கு ஒரு மிகப் பெரிய அச்சம். உலக வல்லரசு நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய விஷயத்திற்கு அரசு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது. அரசு இயங்குகிறது மக்களுக்காக! மக்கள் நீங்கள் இயங்க வேண்டாம், நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன்.

60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம். ஒத்துழைப்புக் கொடுங்கள், வீட்டிலேயே இருங்கள், கவனமாக இருங்கள், வெளியே வராதீர்கள், ஒருவரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளி இருங்கள், யாரிடமும் பேசாதீர்கள், விலகி நில்லுங்கள், விடுமுறை மனநிலைக்குப் போகாதீர்கள் என்றுதான் கேட்கிறோம்.

நீங்களாகவே முன் வந்து, மக்களாகவே முன்வந்து ஊரடங்குக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். தற்போது எல்லா அமைச்சர்களும், எங்களுடைய மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும், என்னுடைய தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற விஷயத்திற்கு, முதல்வருடைய உத்தரவுக்கு தயவுசெய்து நாம் அத்தனை பேரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம். நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஒத்துழைப்பை மற்றவர்கள் கொடுக்கச் செய்வதும் அவசியம்.

100 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை தமிழகத்திற்கு, ஏன் உலகத்திற்கே வந்தது இல்லை.

முதல்வரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை, 24 மணிநேரமும் தயாராக இருக்கிறது"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x