Published : 24 Mar 2020 03:29 PM
Last Updated : 24 Mar 2020 03:29 PM
பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைக்கும் அரசின் பணி தொடர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பாமக மற்றும் மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாமக நன்றி தெரிவிக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு வருவாய் கோட்டங்களைக் கொண்டது. இரு கோட்டங்களும் பூகோள ரீதியாகப் பிரிந்துள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலைக் கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. மயிலாடுதுறை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் பாமக போராடி வந்திருக்கிறது.
கடந்த ஆண்டில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்போது கூட, அடுத்தகட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; அங்கு மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இத்தகைய சூழலில் நாகை மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இதன் மூலம் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், அரசு நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்கு நாகப்பட்டினத்திற்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்காது. இது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
சிறிய மாவட்டங்கள்தான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தான் இது குறித்த கோரிக்கைகள் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன.
கடந்த 14 மாதங்களில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 புதிய மாவட்டங்கள் பாமகவின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டவையாகும். பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அமைக்கும் அரசின் பணி தொடர வேண்டும்.
மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அங்கு ஏராளமான தொழில் திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரியை அமைத்துத் தர வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு, காந்தி அழைப்பு விடுத்த முதல் அறப்போராட்டத்தில் பங்கேற்று உயிர் துறந்த மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த தியாகி நாகப்பன் படையாட்சியின் பெயரைச் சூட்ட வேண்டும்; ஆட்சியர் வளாகத்தில் அவரது உருவச்சிலை அமைக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT