Published : 24 Mar 2020 01:39 PM
Last Updated : 24 Mar 2020 01:39 PM
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ துப்புரவுப் பணியாளர்களுக்கு சட்டப்பேரவை கரவொலி எழுப்பி பாராட்டுத் தெரிவித்தது. கூடுதலாக ஒருமாத சம்பளம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர் வேகத்தில் நடந்து வருகின்றன. ஆனால், கரோனா வைரஸ் புயல் வேகத்தில் பரவுகிறது. மனிதனுக்கும் கிருமிக்குமான போராட்டத்தில் முன்னணி போர்ப்படைத் தளபதிகளாக விளங்குவது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரே.
போர் முனையின் முன்னணியில் உள்ள இவர்கள் பணி மகத்தானது. சீனாவில் முதன்முதலில் கரோனா வைரஸைக் கண்டுபிடித்து உலகுக்கு சொல்லி சிகிச்சை அளித்த மருத்துவர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார். கேரளாவில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பலரும் நோயின் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய தியாகப் பணியைச் செய்து வரும் மருத்துவர்களை நாட்டின் உயர்ந்த அமைப்பான மக்கள் சபையான சட்டப்பேரவையில் பாராட்டி கரவொலி எழுப்பப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்,
முதல்வர் பழனிசாமி இன்று (24.3.2020) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.
“கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதற்கு துணையாகச் செயல்படுகின்ற பிற துறைகளின் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT