Published : 24 Mar 2020 12:21 PM
Last Updated : 24 Mar 2020 12:21 PM
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி அவரவர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக அடித்துப் பிடித்து ஊருக்குச் செல்வதால் சுங்கச்சாவடிகளில் வாகனத் தேக்கம் உள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் சுங்கக்கட்டணம் குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என சாலைப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனாவின் பாதிப்பு தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துள்ள நிலையில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 3,81,598 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் ஒரு லட்சத்தை எட்ட 30 நாட்கள் எடுத்துக்கொண்ட கரோனா வைரஸ் அடுத்த லட்சத்தை எட்ட 14 நாட்களை எடுத்துக்கொண்டது, மூன்றாவது லட்சத்தை அடைய 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. உலகில் வேகமாக பரவும் கரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.
இந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தைவிட மார்ச் மாதத்தில் அதன் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனிமைப்படுத்துதலில் காட்டப்படும் அலட்சியம். தமிழகத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று வேகவேகமாக பல முடிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு. இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் அடித்துப் பிடித்து வாகனங்களில் சொந்த ஊருக்குக் கிளம்பினர்.
இதனால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. ஒன்றுகூடுதலைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்துவிட்டு சுங்கச்சாவடிகளில் மைல் கணக்கில் வாகனங்களை நிறுத்தும்போது கரோனாவைக் காசு கொடுத்து வரவழைப்பது போன்றது என்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று மாலை வரைதானே வாகனங்கள் செல்லப்போகின்றன. அதற்காகவாவது சுங்கச்சாவடிகளை கட்டணமில்லாமல் திறந்து விடலாமே என்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத்த மாவட்டத்தில் உள்ள போலீஸார் முடிவெடுத்தால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இதை ஏற்று பல சுங்கச்சாவடிகள் கட்டணத்தை வசூலிக்கவில்லை. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT