Published : 24 Mar 2020 09:29 AM
Last Updated : 24 Mar 2020 09:29 AM

துபாயிலிருந்து விமானத்தில் மதுரை வந்த நெல்லை இளைஞருக்கு கரோனா தொற்று: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருநெல்வேலி

துபாயிலிருந்து விமானத்தில் மதுரை வந்த திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 39 வயது இளைஞர் கடந்த மார்ச் 17-ம் தேதி துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். மதுரையிலேயே உடல்நலக் குறைவு இருந்துள்ளது. ஆனால், மதுரையில் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என தெரியவில்லை. அங்கிருந்து, சொந்த ஊருக்கு வந்த அந்த இளைஞர், வள்ளியூர், கள்ளிகுளம் பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கும் வந்து தங்கியுள்ளார்.

காய்ச்சல் அதிகமாகவே, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். காய்ச்சலின் தாக்கம் அதிகரித்ததால், நேற்று முன்தினம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்

அவரது சொந்த ஊரான சமூகரெங்கபுரத்திலும் மற்றும் அவர் சென்று வந்த இடங்கள் மற்றும் அவர் தங்கியிருந்த இடங்களைக் கேட்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை இறங்கிஉள்ளது. இந்த ஊர்களிலும், அவர் பங்கேற்ற 2 திருமண விழாக்களிலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், ஒருவரின் உடலில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது குறைந்தது 15 நாட்களுக்கு பிறகே வெளியே தெரியும். அதற்குள் இவர்களை ஊருக்குச் செல்ல அனுமதித்ததாலேயே ஆபத்து அதிகமாகியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, இவர்களை எச்சரித்து அனுப்பினாலும், இவர்கள் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் இருப்பதில்லை. நெல்லை இளைஞரை, மதுரை விமான நிலையத்திலேயே முறையாக பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியிருந்தால் தற்போது ஏற்பட்டு உள்ள இக்கட்டான நிலையை தவிர்த்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

கேரளாவுக்கு அனுப்பப்பட்டனர்

இதேபோன்று, கேரளாவில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் உள்ள சோதனைச்சாவடிக்கு கரோனா அறிகுறியுடன் வந்த தமிழர்கள் மூவரும் ஆம்புலன்ஸுடன் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்குவோரை முழுமையாக பரிசோனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x