Published : 23 Mar 2020 10:02 PM
Last Updated : 23 Mar 2020 10:02 PM

கரோனா தடுப்பு; சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு  

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் இணைய தளத்தின் வழியே விவரங்களை பதிவு செய்யலாம் என ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் கரோனா தொற்று நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மா உணவகம் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது, ஆதரவற்றோரை காப்பகங்களில் வைத்து பராமரிப்பது, சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பணிகளுக்கு கூடுதல் மனித உழைப்பு தேவைப்படுவதால் தன்னார்வர்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில். கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும், வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் (DBC) பணியாளர்களை கொண்டு வீடுகள்தோறும் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளனவா என கணக்கெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பொது மக்கள் வழிப்பாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மாநகராட்சி காப்பகங்களிலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மாநகராட்சியின் சமூதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநராட்சியின் சார்பில் உணவும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www. chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் covid-19. Volunteers Registration & NGO’s Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உதவிப்பொருட்கள் மற்றும் தங்களால் வழங்கக்கூடிய பொருட்களின் விவரங்களை 044 – 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக்கூடிய தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்”.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x