Published : 23 Mar 2020 05:29 PM
Last Updated : 23 Mar 2020 05:29 PM
வெளிநாடு சென்று ஊருக்கு திரும்பியோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளோர் தனிமைப்படுத்தலை அலட்சியம் செய்து வெளியில் உலாவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வெளிநாடு சென்று வந்தோர் பட்டியல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்றினால் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 9 பேரில் 8 பேர் வெளிநாடுகளிலுருந்தும், ஒருவர் டெல்லி சென்றுவிட்டு திரும்பியவர். இதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து கடந்த மாதம், இந்த மாதங்களில் தமிழகம் திரும்பியோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு எச்சரிக்கையை மீறி அலட்சியமாக உலாவும் நபர்களால் இந்தத்தொற்று சமுதாயத்தொற்றாக மாறும் நிலைக்கு செல்லலாம் என்று அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெல்லி இளைஞர் மற்றும் நேற்று நெல்லையில் அனுமதிக்கப்பட்ட துபாயிலிருந்து திரும்பிய நபர் தங்களுக்கு நோய்பாதிப்பு தெரியவருவதற்கு முன்னரே பலருடன் பழகியுள்ளதால் அவர்களுடன் பழகியவர்களை தேடி கண்டுபிடிக்கும் சிக்கலான பணியும் அவர்கள் மூலம் மேலும் சிலருக்கு பரவுவதும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பொதுவெளியில் நடமாடுவதால் அவர்கள் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீட்டு வாசலில் மாநகராட்சி மூலம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, காவல்துறையிலும் அவர்கள் பட்டியல் கொடுக்கப்படுகிறது. இதையும் மீறி நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் 144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தருமாறும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கண்டறியப்பட்டோர், கண்காணிப்பில் உள்ளவர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சோதனையிடப்பட்டவர்கள் ( Screened Passengers) 2,09,035 பேர், கண்காணிப்பில் உள்ளோர் (Under Followup) 12,519 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் (Beds in Isolation wards) 9266 பேர், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளோர் (Current Admissions) 89 பேர், சோதனைக்கு அனுப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை (Samples Tested) 552 , இல்லையென வந்தது(Negative)503, தொற்று உறுதியானது (Positive) 9 பேர், டிஸ்சார்ஜ் ஆகி சென்றது (discharged) ஒருவர், சோதனையில் காத்திருப்பு (Under Process) 40.
இதுகுறித்த அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:
“#caution: சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது கரோனா நோய் பரவுதலை தடுக்க எடுக்கப்படும் ஒரு முக்கியமான முடிவு. இந்த இக்கட்டான நிலையில் பொதுமக்கள் இத்தகைய நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT