Published : 23 Mar 2020 03:31 PM
Last Updated : 23 Mar 2020 03:31 PM
தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்துதல் குறித்து பேசியதாவது:
"கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில், தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது.
இதனை கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முடிவுகளை இந்த பேரவையின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.
மத்திய அரசால் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம், 1897-ல் ஷரத்து 2 இன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.
இதற்கான விரிவான அறிவிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் தொடங்கி 31.3.2020 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த அறிவிக்கையை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சியர்களும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவின்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன:
1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
2. அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
3. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
4. தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
5. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
6. அத்தியாவசிய கட்டிடப் பணிகள் தவிர பிற கட்டிடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.
7. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.
கரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT