Published : 23 Mar 2020 01:50 PM
Last Updated : 23 Mar 2020 01:50 PM
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர கால தொழில்நுட்பனர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 12 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உட்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்த எம்.அம்பிகா, ஆர்.ராஜாத்தி, பி.லோமணி, எம்.ரீங்கல், ஏ.சீதாலெட்சுமி, ஜி.அம்பிகா, எல்.வீரலெட்சுமி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாங்கள் அவசர கால தொழில்நுட்பனர் சான்றிதழ் படிப்பு முடித்து அரசு வேலைக்காக காத்திருக்கிறோம்.
எங்களால் மருத்துவ அவசரம் மற்றும் அறுவை சிகிச்சையின் போது அதி நவீன வெண்டிலேட்டர்கள், டயாலிசிஸ் இயந்திரம், மல்டிபரா மானிட்டர், இசிஜி, நெபுலிஷேசன் இயந்திரம், பிளாஸ்மாபெரிசிஸ் இயந்திரங்களை திறமையாக கையாள முடியும்.
மருத்துவமனைகளில் அனைத்து அவசரப் பிரிவிலும் அவசர கால தொழில்நுட்பனரின் பணி அவசியத் தேவையாக உள்ளது.
இதனால் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர கால தொழில்நுட்பனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் அவசர கால தொழில்நுட்பனர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கும் 30.1.2019-ல் மருத்துவ கல்லூரி இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து துறைகளின் தலைவர்களிடம் தகவல் பெற்று அவசர கால தொழில்நுட்பநர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக அரசுக்கு டீன்கள் பரிந்துரை அனுப்பினர். ஆனால் இதுவரை பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
இதனால் மருத்துவ கல்லூரி இயக்குனரின் உத்தரவின் பேரில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் அவசர கால தொழில்நுட்பநர் பணியிடங்களை உருவாக்கக்கோரி 8.2.2020-ல் மனு அனுப்பினோம். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்துத.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார்.
பின்னர், அரசு மருத்துவமனைகளில் அவசர கால தொழில்நுட்பநர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பான மனுவை மருத்துவக் கல்வி இயக்குனர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT