Last Updated : 23 Mar, 2020 08:17 AM

 

Published : 23 Mar 2020 08:17 AM
Last Updated : 23 Mar 2020 08:17 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை: பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்த தனி வார்டுகள் தயார்

திருச்சி

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தமிழக சிறைகளிலுள்ள 15,000 கைதிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க ஒவ்வொரு சிறையிலும் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புழல்-1, புழல்-2, திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் சுமார் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சிறைக் கைதிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறையினருக்கு சிறைத் துறை டி.ஜி.பி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறைகள், கிளைச் சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளையும் சிறை மருத்துவக் குழுவினர் தற்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா வைரஸ் பாதிப்பு அல்லது அறிகுறி இருந்தால் கைதிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்குப்புறமான பிளாக்குகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாஸ்க் அணிய வேண்டும்

இதுகுறித்து சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி (பொ) ஆர்.முருகேசன் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது. குடியிருப்பில் இருந்து சிறைக்கு பணிக்கு வரக்கூடிய காவலர்கள், பணியாளர்கள், விசாரணைக்கு சென்று வரக்கூடிய கைதிகள் உள்ளிட்ட அனைவரும் கை, கால்களை நன்கு கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பணியாளர்கள், காவலர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைதிகளை சந்திக்க தடை

கைதிகளை சந்திக்க உறவினர்கள், வழக்கறிஞர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத, அவசியமான சந்திப்பு எனில் வழக்கறிஞர்கள் மட்டும் சுமார் 6 அடி தூரத்தில் நின்று கைதியை சந்தித்து 5 நிமிடம் மட்டும் பேசலாம்.

தமிழகம் முழுவதும் சிறைக ளில் உள்ள கைதிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், ஒருவருக்கு கூட பாதிப்போ, அறிகுறியோ இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. வழக்குகளில் கைதாகி புதிதாக சிறைக்கு வரக்கூடியவர்கள், சிறை மருத்துவமனையில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டு கைதிகளாக இருந் தால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் வழங்கிய பின்னரே சிறைக்குள் அனுமதிக்கிறோம்.

எண்ணிக்கையை குறைக்க முயற்சி

அதேபோல சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், நீதிமன்றங்களில் ஜாமீன் பெறு வதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், ஜாமீனில் அனுமதித்தால் சமூகத் துக்கு இடையூறு ஏற்படுத்தா தவர்கள் போன்றவர்களை அடை யாளம் கண்டு சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை நீதித்துறை, காவல்துறை, சிறைத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

முதல்கட்டமாக உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாசம் தலைமையிலான குழுவினர் மதுரை சிறைத்துறை சரகத்துக்கு உட்பட்ட சிறைகளில் இருந்து 124 விசாரணை கைதி களை விடுவித்து கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இதை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சிவஞானம் மார்ச் 23-ல் (இன்று) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x